Published : 29 Nov 2023 01:51 PM
Last Updated : 29 Nov 2023 01:51 PM
புதுடெல்லி: கேரள ஆளுநர் முகமது ஆரிஃப் கான் 7 மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அம்மாநில அரசு இன்று (புதன்கிழமை) கேள்வி எழுப்பியுள்ளது.
இதுகுறித்த வழக்கு விசாரணையின்போது கேரள ஆளுநர் முகமது ஆரிஃப் கான் 7 மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைத்தது குறித்த விவரங்களைக் குறித்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், தற்போதைய மனு மீதான திருத்தத்தை தாக்கல் செய்யுமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது.
இன்று கேரளா அரசு சார்பாக ஆஜரான கே.கே.வேணுகோபால், "அதில் சில மசோதாக்கள், அரசியலமைப்பு சாசன பிரிவு 213-ன் கீழ் ஆளுநர் பிறப்பித்த அவசர சட்டங்களாகும். அதனைத் தற்போது குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்க எந்த அவசியமும் இல்லை" என்று வாதிட்டார். இதனைத் தொடர்ந்து இந்த விசயத்தையும் திருத்தப்பட்ட மனுவில் சேர்த்துக்கொள் கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதனிடையே கேரள அரசு குறித்த அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணியின் கருத்துக்களை நிராகரித்த வேணுகோபால், "அட்டர்னி ஜெனரலின் கருத்துகள் வேடிக்கையானது. கல்வியறிவு, பொது சுகாதாரம் போன்ற பல விஷங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படும் மாநிலங்களில் கேரளாவும் ஒன்று" என்று தெரிவித்தார்.
முன்னதாக, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட முக்கிய மசோதாக்களை அவர் காரணமின்றி தாமதப்படுத்துவதை எதிர்த்து கேரள அரசு தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்கும் படி உச்ச நீதிமன்றம் நவ.20-ம் தேதி கூறியிருந்தது. அப்போது வேணுகோபாலும் வழக்கறிஞர் சி.கே. சசியும், இத்தகைய தாமதங்கள் சில மாநிலங்களில் ஒரு நோயைப்போல வளர்ந்து வருகிறது என்று தெரிவித்தனர்.
ஆளுநருக்கு எதிராக வழக்கு: கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களில், ஆளுநர் ஆரிப் முகமது கான் கையெழுத்திடாததால், உச்ச நீதிமன்றத்தில் அவர் மீது கேரள அரசு வழக்கு தொடர்ந்திருத்தது. இதுகுறித்து கேரள சட்ட அமைச்சர் ராஜீவ் "ஆளுநர் தனது அரசியல் சாசன கடமையை செய்யாததால், நாங்கள் உச்ச நீதிமன்றத்தை அணுக முடிவு செய்தோம். இது அரசு மற்றும் ஆளுநர் இடையிலான பிரச்சினை அல்ல. இது சட்டப்பேரவை மற்றும் ஆளுநர் இடையிலான அரசியல் சாசன உறவு பற்றியது ஆகும்" என்று தெரிவித்திருந்தார்.
இப்பிரச்சினை தொடர்பாக கேரள ஆளுநர் முகமது ஆரிப் கான் ஏற்கனவே அளித்த பதிலில், "சில மசோதாக்கள் குறித்த எனது கேள்விகளுக்கு கேரள அரசு இன்னும் பதில் அளிக்கவில்லை. மசோதாவை கொண்டுவந்த அமைச்சரால் என் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியவில்லை. இதனால், இந்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க கோரி கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் கேட்டுள்ளேன். முதல்வரிடம் இருந்து எந்தவித விளக்கமும் வராததால், மசோதாக்கள் கையெழுத்திடப்படாமல் உள்ளன" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT