Published : 29 Nov 2023 01:23 PM
Last Updated : 29 Nov 2023 01:23 PM

தெலங்கானா தேர்தல் | “காங்கிரஸ், பிஆர்எஸ் கட்சியினர் வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா” - பாஜக குற்றச்சாட்டு

மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி

ஹைதராபாத்: தெலங்கானா தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் மற்றும் பிஆர்எஸ் சார்பில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுகிறது என பாஜக குற்றம் சாட்டி உள்ளது.

தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில், பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான கிஷன் ரெட்டி ஹைதராபாத்தில் உள்ள பாக்கிய லட்சுமி கோயிலுக்கு வந்து வழிபட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பாக்கிய லட்சுமியின் அருளால், உத்தராகண்ட்டில் சுரங்கப்பாதையில் சிக்கிக் கொண்ட 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இதற்கான பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைப் பண்பு மற்றும் முதல்வர் புஷ்கர் சிங் தாமியின் தொடர் கண்காணிப்பு காரணமாக மீட்பு முயற்சி வெற்றிகரமாக நிறைவேறி உள்ளது.

தெலங்கானாவில் நாளை தேர்தல் நடைபெற உள்ளது. தெலங்கானா வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்கும் தங்கள் உரிமையைப் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நல்ல அரசு வர வேண்டும். நல்லவர்கள் ஆட்சியாளர்களாக வர வேண்டும் என்று பாக்கியலட்சுமி அம்மனிடம் வேண்டிக்கொண்டேன். அதன் மூலம், மாநிலத்தில் நல்ல பணிகள் நிறைய நடக்க வேண்டும்.

நேற்று காலை முதல் பல்வேறு கட்சிகள் குறிப்பாக காங்கிரஸ் மற்றும் பிஆர்எஸ் கட்சிகள் சார்பில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்படுகிறது. தேர்தல் ஆணையம் இதனைத் தடுக்க வேண்டும். தேர்தல் அமைதியாக நடக்க வேண்டும். மக்கள் சுதந்திரமாக வாக்களிப்பதற்கான சூழல் இருக்க வேண்டும். மது விநியோகிக்கப்படுகிறது. அதனையும் தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்த வேண்டும். அமைதியாகவும், ஆரோக்கியமாகவும் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்" என வலியுறுத்தினார்.

தெலங்கானாவில் மொத்தமுள்ள 119 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அங்கு தேர்தல் ஏற்பாடுகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேர்தல் எவ்வித பிரச்சினையும் இன்றி நடைபெறுவதை உறுதி செய்வதற்கானப் பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த தேர்தலில், ஆளும் பிஆர்எஸ், காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. இந்தத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 3-ம் தேதி எண்ணப்பட உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x