Published : 29 Nov 2023 01:14 PM
Last Updated : 29 Nov 2023 01:14 PM

17 நாள் போராட்டம்: “நம்பிக்கை மட்டுமே இருந்தது” - மரணத்தை வென்ற உத்தராகண்ட் சுரங்கத் தொழிலாளர்களின் அனுபவப் பகிர்வு

மீட்கப்பட்ட சுரங்க தொழிலாளர்கள்

டேராடூன்: 17 நாட்கள் பெரும் போராட்டத்துக்குப் பின் உத்தராகண்ட் மாநிலத்தின் சில்க்யாரா சுரங்கத்தில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களும் நேற்று (நவ.28) மீட்கப்பட்டனர். வாழ்வா சாவா?! என்ற போராட்டத்தின் விளிம்பிலிருந்து மீட்கப்பட்டிருக்கும் தொழிலாளர்கள் தங்களின் அனுபவங்களை தெரிவித்துள்ளனர்.

17 நாட்களும் இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்களின் நம்பிக்கைக்கு விடப்பட்ட சவாலாகவே பார்க்கப்படுகிறது. பலரின் கூட்டு முயற்சியால் தான் இந்த சாத்திய நிகழ்வு நடைபெற்றுள்ளது. நம்பிக்கையுடன் தாக்குப்பிடித்த தொழிலாளர்களின் அனுபவப் பகிர்வு பின்வருமாறு:

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த விஸ்வஜீத் குமார் வர்மா கூறும்போது, "நான் மிகவும் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறேன். என்னுடன் சிக்கிய மற்ற தொழிலாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர். இப்போது, நாங்கள் மருத்துவமனையில் இருக்கிறோம். சுரங்கப்பாதையில் இருந்தபோது எங்களின்மீது குப்பைகள் விழுந்தன. அங்கு நிறைய காலி இடம் இருந்தது. நாங்கள் சுரங்கப்பாதைக்குள் சுற்றித் திரிந்தோம். விரைவில் வெளி உலகத்தைப் பார்ப்போம் என்று முழு நம்பிக்கை இருந்தது" என்று கூறினார்.

விஸ்வஜீத்தின் சக ஊழியர் சுபோத் குமார் வர்மா கூறுகையில், "நான் ஜார்கண்டில் வசிப்பவன். சுரங்கப்பாதையின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்ததால் தொழிலாளர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. 18-24 மணி நேரம் அந்த அச்சம் எங்களை ஆட்கொண்டது. அதன் பிறகு, எங்களுக்கு உணவு மற்றும் குளிர்பானங்கள் கிடைக்க ஆரம்பித்தது. அதோடு மாநில அரசு ஆக்ஸிஜனும் கிடைக்க ஏற்பாடு செய்தது. அரசு எங்களை எப்படியோ மீட்டு கூட்டிச் செல்வார்கள் என்ற முழு நம்பிக்கையுடன் இருந்தோம்” என்றார்.

மேலும் சுரங்கப்பாதையில் சிக்கிய அகிலேஷ் சிங் கூறுகையில், “சுமார் 18 மணி நேரமாக எங்களுக்கு வெளியுலகத் தொடர்பே இல்லை. நாங்கள் சுரங்கத்துக்குள் சிக்கிய உடனேயே தண்ணீர்க் குழாயைத் திறந்தோம். தண்ணீர் விழ ஆரம்பித்ததும் வெளியில் இருந்தவர்கள் நாங்கள் சுரங்கத்துக்குள் சிக்கியிருப்பதை உணர்ந்து எங்களுக்கு ஆக்ஸிஜனை அனுப்பத் தொடங்கினர். இப்போது நலமுடன் இருக்கிறோம். உடல்நலப் பரிசோதனைகள் முடிந்த பிறகு நான் வீட்டிற்குச் செல்ல திட்டமிட்டுள்ளேன். அடுத்து என்ன செய்வது என்று முடிவு செய்வதற்கு முன் 1-2 மாதங்கள் ஓய்வு எடுப்பேன்” என்றார்.

உத்தரகாண்ட் சுரங்கப்பாதை மீட்பு மேற்பார்வையாளர் பாஸ்கர் குல்பே இது குறித்து கூறுகையில், சுரங்கப்பாதையில் 17 நாட்களாக சிக்கியிருந்த தொழிலாளர்கள் காட்டிய தைரியம்தான், மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு உற்சாகத்தை அளித்தது” என்றார்.

உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, “இந்தப் பணி மிகவும் சவாலானது. தொழிலாளர்களை மீட்க உதவிய அனைவருக்கும் எனது நன்றி. குறிப்பாக நமது பிரதமருக்கு நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன். பிரதமர் நரேந்திர மோடி மீட்புப் பணி குறித்த எந்த தகவல்களையும் கேட்காமல் இருந்ததில்லை. மிகச்சிறிய விவரங்கள் உட்பட அனைத்து தகவல்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டார்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x