Published : 29 Nov 2023 11:43 AM
Last Updated : 29 Nov 2023 11:43 AM

சீனாவில் பரவும் நிமோனியா: மத்திய அரசு அவசர கடிதம் எதிரொலி; கண்காணிப்பை தீவிரப்படுத்திய 5 மாநிலங்கள்

சீனா வைரஸ்

புது டெல்லி: சீனாவில் நிமோனியா தொற்று வேகமாகப் பரவிவருவதாக செய்தி வெளியான நிலையில், மத்திய அரசு மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியிருந்தது. இதையடுத்து, மத்திய அரசின் உத்தரவுக்குப் பிறகு தமிழ்நாடு, கர்நாடகா, ராஜஸ்தான், உத்தராகண்ட், குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்கள் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளன. தத்தம் மாநிலங்களில் மாவட்ட நிர்வாகங்கள் உஷார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளன.

கர்நாடகாவில், பருவகால புளூ (seasonal flu) வைரஸின் பாதிப்புகளை முன்னிட்டு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. அதில், "பருவகால காய்ச்சல் என்பது ஒரு தொற்று நோயாகும். இது பொதுவாக ஐந்து முதல் ஏழு நாட்கள் நீடிக்கும். இதனால், குறைவான இறப்பு விகிதங்களே உள்ளன என அறியப்படுகிறது. இருப்பினும் குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் உள்ளிட்டோருக்கும், ஸ்டீராய்டுகள் போன்ற நீண்டகால மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்வோருக்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். இதனால், காய்ச்சல், குளிர், உடல்சோர்வு, பசியின்மை , குமட்டல் உள்ளிட்ட அறிகுறிகள் காணப்படும். அதிக பாதிப்பு நிலையில் உள்ளவர்களுக்கு 3 வாரங்கள் வரை வறட்டு இருமலும் காணப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ராஜஸ்தானின் மருத்துவ மற்றும் சுகாதாரத் துறை அதன் ஊழியர்களை விழிப்புடன் இருக்க அறிவுறுத்தியுள்ளது. ராஜஸ்தான் சுகாதாரத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரா சிங், காணொலி மூலம் அதிகாரிகளிடம் பேசுகையில், "தற்போது நிலைமை கவலைக்கிடமாக இல்லை , ஆனால் மருத்துவ ஊழியர்கள் மாநிலம் முழுவதும் கண்காணிப்புடன் செயல்பட வேண்டும். மேலும் தொற்று நோய்களைத் தடுக்க முழு விழிப்புடன் பணியாற்ற வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

உத்தரகாண்ட் சுகாதார செயலாளர் டாக்டர் ராஜேஷ் குமார் இது தொடர்பான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளார். குழந்தைகளுக்கு ஏற்படும் நிமோனியா மற்றும் காய்ச்சல் அறிகுறிகளைக் கண்காணிக்குமாறு மருத்துவக் குழுக்களைக் கேட்டுக்கொண்டார். குஜராத் அரசும் இது தொடர்பாக ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது, அதில் அனைத்து மருத்துவமனைகளும் உஷார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குனர் (Tamil Nadu Director of Public Health and Preventive Medicine) , மாநிலத்தில் சுவாச நோய்களுக்கான கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு சுகாதாரத்துறைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய அரசு எச்சரிக்கை: சீனாவில் பரவி வரும் நிமோனியா காய்ச்சல் அதிக பாதிப்புகளை உருவாக்கி வருவதையடுத்து இரண்டு நாட்களுக்கு முன்பு, மாநில, யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அவசர ஆலோசனை கடிதத்தை எழுதியது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: சீனாவில் பரவி வரும் நிமோனியா வைரஸ் அதிக பாதிப்புகளை உருவாக்கி வருகிறது. குறிப்பாக, இந்த வகை வைரஸ் அதிகளவில் குழந்தைகளிடம் சுவாசப் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சீனாவில் பொது சுகாதார நெருக்கடி நிலை உருவாகியுள்ளது.

முன்னெச்சரிக்கை: இதனை உணர்ந்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக் கைகளை முடுக்கி விட வேண்டும். பொது சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். குறிப்பாக, மருந்துகள், ஆக்சிஜன் உள்ளிட்டவற்றை போதுமான அளவில் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்.

கண்காணிப்பு குழு: நிமோனியா காய்ச்சல் காரணமாக கடுமையான சுவாசப் பிரச்சினைகளுக்கு ஆளாவோரை கண்டறிந்து தேவையான சிகிச்சைகளை அளிக்க மாவட்ட மற்றும் மாநில கண்காணிப்பு குழுக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x