Published : 29 Nov 2023 05:40 AM
Last Updated : 29 Nov 2023 05:40 AM

தெலங்கானாவில் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது: நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு

தெலங்கானாவில் நேற்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் ஜுப்ளி ஹில்ஸ் பகுதியில் ஒரு ஆட்டோவில் பயணம் செய்தார். படம்: பிடிஐ

ஹைதராபாத்: தெலங்கானாவில் சட்டப்பேரவைக் கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 4 மணியுடன் ஓய்ந்தது. நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.

தெலங்கானா உள்ளிட்ட 5 மாநில தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த நவம்பர் 3-ம் தேதி வெளியிட்டது. இதில் 119 உறுப்பினர்களை கொண்ட தெலங்கானா சட்டப்பேரவைக்கு நவம்பர் 30-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது.

தெலங்கானாவில் மொத்தம் 2,290 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இங்கு 3.26 கோடி வாக்காளர்கள் உள்ளனர். ஆளும் பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்), காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

முதல்வர் சந்திரசேகர ராவ் 95 பொதுக்கூட்டங்களில் பங்கேற்று சூறாவளி பிரச்சாரம் செய்தார். இவரது மகனும் அமைச்சருமான கே.டி. ராமாராவ், மகள் கவிதா ஆகியோரும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.

காங்கிரஸ் சார்பில் ராகுல், பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோரும் பாஜக சார்பில் பிரதமர் மோடி, அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன், பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா உள்ளிட்டோரும் தீவிர பிரச்சாரம் செய்தனர். கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற பிரச்சாரம் நேற்று மாலை 4 மணியுடன் ஓய்ந்தது.

இதைத் தொடர்ந்து தெலங்கானா மாநில தலைமை தேர்தல் அதிகாரி விகாஸ்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தெலங்கானாவில் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது. 30-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். இனி அரசியல் கட்சிகளோ, சுயேச்சை வேட்பாளர்களோ எவ்வித பிரச்சாரத்திலும் ஈடுபடக் கூடாது. சமூக வலைதளங்கள், குறுஞ்செய்திகள் வாயிலாகவும் வாக்கு சேகரிக்கக் கூடாது.

மாநிலத்தில் மொத்தம் 35,655 வாக்குச் சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் 7,571 வாக்குசாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இத்தேர்தலில் முதல்முறையாக 'ஹோம் வோட்டிங்' முறை அமல்படுத்தப்படுகிறது. இதன்படி 80 வயதை கடந்தவர்களின் வீடுகளுக்கு அதிகாரிகள் சென்று, அவர்களின் வாக்குகளை பதிவு செய்ய உள்ளனர்.

வாக்குச் சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தேர்தலையொட்டி 3 நாட்களுக்கு மதுபான விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 45 ஆயிரம் போலீஸார் மற்றும் 70 கம்பெனி ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 3 லட்சம் அரசு ஊழியர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளனர். இதுவரை ரூ.737 கோடி மதிப்புள்ள பணம், நகைகள், போதைப் பொருட்கள், மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x