Published : 19 Jan 2018 10:05 AM
Last Updated : 19 Jan 2018 10:05 AM
மறைந்த ஆந்திர முதல்வரும், நடிகருமான என்.டி. ராமாராவிற்கு பாரத ரத்னா விருது வழங்குவதில் சதி நடப்பதாக அவரது மனைவி லட்சுமி சிவபார்வதி குற்றம்சாட்டியுள்ளார்.
என்.டி.ராமாராவின் 22வது நினைவு நாள் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. ஹைதராபாத்தில் உள்ள அவரது சமாதிக்கு என்.டி.ராமாராவின் மனைவி லட்சுமி சிவ பார்வதி, மகன்கள் ஹரிகிருஷ்ணா, நடிகர் பாலகிருஷ்ணா மற்றும் தெலுங்கு தேசக் கட்சி நிர்வாகிகள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர். அப்போது லட்சுமி சிவபார்வதி கூறியதாவது:
என்.டி.ராமாராவின் வாழ்க்கை வரலாற்றை அவரது மகன் பாலகிருஷ்ணா திரைப்படமாக எடுக்க உள்ளார். இதில், என்.டி.ஆருக்கு இழைக்கப்பட்ட அநீதியையும் மக்களுக்கு அவர் தெரியப்படுத்த வேண்டும். மிகப்பெரிய கலைஞரான என்.டி.ராமாராவுக்கு பாரத ரத்னா விருது இன்னமும் வழங்கப்படவில்லை. இந்த விவகாரத்தில், அவருக்கு வேண்டப்பட்டவர்களே சதி செய்கின்றனர். எனவே, மத்திய அரசு இதில் தலையிட்டு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு லட்சுமி சிவபார்வதி தெரிவித்தார்.
ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் என்.டி.ராமாராவ் சிலைகளுக்கு தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள், ரசிகர்கள் சார்பில் மலர் மாலை சூட்டி அஞ்சலி செலுத்தப்பட்டது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அமராவதியில் என்.டி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT