Published : 28 Nov 2023 08:32 PM
Last Updated : 28 Nov 2023 08:32 PM

உத்தராகண்ட் சுரங்கப் பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களும் மீட்பு: 17 நாள் விடாமுயற்சிக்குப் பின் நாடே மகிழ்ச்சி!

உத்தராகண்ட் மாநிலம் சில்க்யாரா சுரங்கப் பாதையில் மீட்கப்பட்ட தொழிலாளர்கள்

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தின் சில்க்யாரா சுரங்கத்தில் கடந்த 17 நாட்களாக சிக்கியிருந்த 41 தொழிலாளர்களையும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர். இந்த அபார மீட்புப் பணியின் வெற்றியை நாடே மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறது.

முன்னதாக, உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசி சுரங்கப் பாதையில் குழாய் பதிக்கும் பணிகள் நிறைவடைந்து விட்டதாக, அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்திருந்தார். மேலும், இடிந்து விழுந்த சில்க்யாரா சுரங்கம் இறுதியாக உடைக்கப்பட்டு விட்டாதாகவும் அதிகாரிகள் தெரிவித்ததால் உள்ளே சிக்கியிருந்த தொழிலாளர்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மீட்புப் பணிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில், 41 தொழிலாளர்களையும் பத்திரமாக வெளியே கொண்டுவரும் நடவடிக்கைகள் தொடங்கி நடைபெற்று வந்தது.

மீட்புப் பணிக்களத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படைகளைச் சேர்ந்த வீரர்கள் கயிறு, விளக்குகள், ஸ்ட்ரக்சர்கள் போன்ற உபகரணங்களுடன் சுரங்கத்தின் முன்னால் காத்திருந்தனர். இந்தச் சிக்கலான மீட்பு திட்டத்தின் ஒரு பகுதியாக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தேவையான உபகரணங்களுடன் குழாய் வழியாக மறுமுனைக்கு முதலில் உள்ளே சென்று அங்கு சிக்கியிருந்த தொழிலாளர்களுடன் தொடர்புகொண்டு, அவர்களின் தற்போதைய நிலையின் ஆய்வு செய்து, பாதுகாப்பாக வெளியேறுவதற்கான வழிகளைத் தெரிவித்தனர்.

ஒருவர் பின் ஒருவராக... - இந்நிலையில், 17 நாட்களுக்குப் பின், சுரங்கத்தில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களையும், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். ஒருவர் பின் ஒருவராக சுரங்கத்தில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். முதலாவது நபர் வெளியே வந்தபோது, சுரங்கத்தின் வெளியே காத்திருந்த மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளா்கள், உறவினர்கள், பொதுமக்கள், ஓட்டுநர்கள் என அனைவரும் கைகளைத்தட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

41 தொழிலாளர்களும் மீட்பு: சுரங்கத்தில் இருந்து முதலில் 5 தொழிலார்கள் மீட்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து நடந்த மீட்பு பணிகளின் மூலம் 15 தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். பின்னர் 33 தொழிலாளர்கள் மீட்கப்பட்டிருந்த நிலையில், 8 தொழிலாளர்களை மீட்க வேண்டி இருந்தது. இறுதியாக சுரங்கத்தினுள் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களும் முழுமையாக மீட்கப்ட்டனர். சுரங்கத்தில் இருந்து வெளியே வந்த தொழிலாளர்கள் ஒவ்வொருவரையும், உத்தராகண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி மாலை அணிவித்து ஆரத்தழுவி வரவேற்றார். 41 தொழிலாளர்கள் மீட்கப்பட்டதற்கு, நாடு முழுவதும் மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சுரங்கத்தில் இருந்து வெளியே வந்த தொழிலாளர்கள் நேரடியாக ஆம்புலன்ஸுக்கு அழைத்து வரப்பட்டு, அங்கு அவர்களுக்கு அடிப்படையான முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும், தொழிலாளர்கள் அனைவரும் ஒருநாள் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டு, பரிசோதனைகளுக்குப் பின்னரே, அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக, உத்தராகண்டில் சில்க்யாரா - பர்கோட் இடையே அமைக்கப்படும் சுரங்கப் பாதையில் கடந்த 12-ம்தேதி மண் சரிவு ஏற்பட்டது. இதில்,41 தொழிலாளர்கள் சுரங்கப் பாதைக்குள் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்பதற்காக, அமெரிக்க தயாரிப்பான ஆகர் இயந்திரம் மூலம் பக்கவாட்டில் துளையிடப்பட்டது. ஆனால், அந்த இயந்திரத்தின் பிளேடு, கம்பிகளில் சிக்கி உடைந்து சுரங்கப் பாதையில் சிக்கிக் கொண்டது. இதனால், அந்த இயந்திரத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டு மீட்புப் பணிகள் வெற்றிகரமாக இறுதிக் கட்டத்தை எட்டியது.

‘எலி வளை’ தொழிலாளர்கள் உறுதுணை: முன்னதாக, சுரங்கப் பாதை மணல் குவியலில் பக்கவாட்டில் தொடர்ந்து துளையிட டெல்லியில் இருந்து 24 சிறப்பு தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டனர். மெலிந்த தேகம், உயரம் குறைவான இவர்கள் சமதளம், மலைப்பகுதியில் எலிவளை போல குடைந்து சிறிய அளவிலான சுரங்கம் தோண்டுவதில் கைதேர்ந்தவர்கள். இதன் காரணமாக ‘எலி வளை' தொழிலாளர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். > வாசிக்க > அன்று தடை செய்யப்பட்ட சுரங்க நடைமுறை... இன்று உயிர் காக்க உறுதுணை... - யார் இந்த ‘எலி வளை’ தொழிலாளர்கள்?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x