Published : 28 Nov 2023 09:54 AM
Last Updated : 28 Nov 2023 09:54 AM

உத்தராகண்ட் சுரங்க விபத்து | இதுவரை 52 மீட்டர் துளையிடப்பட்டுள்ளது; இன்று மாலைக்குள் நல்ல செய்தி - முதல்வர் நம்பிக்கை பேட்டி

டேராடூன்: உத்தராகண்ட் சுரங்கப் பாதையில் பக்கவாட்டில் துளையிடும் பணியில் இதுவரை 52 மீட்டர் அளவுக்கு துளையிடப்பட்டுள்ளதாகவும் இன்று மாலைக்குள் நல்ல செய்தியை எதிர்பார்ப்பதாகவும் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, உத்தராகண்ட் சுரங்கப் பாதையில் பக்கவாட்டில் துளையிடும் பணியில் இதுவரை 51.5 மீட்டர் அளவுக்கு துளையிடப்பட்டுள்ளதாக மீட்புக் குழு தெரிவித்தது. இன்னும் 5 முதல் 6 மீட்டர் தொலைவே எஞ்சியிருப்பதாகவும் விரைவில் அதை நிறைவு செய்வோம் என்றும் எந்தவித இடையூறுமின்றி துளையிடும் பணி நிறைவடைந்தால் இன்றைக்குள் தொழிலாளர்கள் மீட்கப்படலாம் எனவும் மீட்புக் குழு நம்பிக்கை தெரிவித்தது.

துளையிடும் பணி தொடர்பாக நிபுணர் கிறிஸ் கூப்பர் கூறுகையில், "நேற்றிரவு துளையிடும் பணி எவ்வித தடையும் இல்லாமல் சிறப்பாக நடைபெற்றது. இதுவரை 50 மீட்டரைக் கடந்துள்ளோம். இதனால் சற்றே நேர்மறையான எண்ணம் உருவாகியுள்ளது. நம்பிக்கையுடன் பணி தொடர்கிறது" என்றார். 2 மணி நேரத்துக்கு 1 மீட்டர் என்றளவில் துளையிடும் பணி முன்னேறி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் இன்று (செவ்வாய்) காலை மீட்புப் பணிகளை நேரில் பார்வையிட்ட முதல்வர் புஷ்கர் சிங் தாமி இன்று மாலைக்குள் நல்ல செய்தி வரும் என்று செய்தியாளர்களிடம் கூறினார். அவர் கூறுகையில் 52 மீட்டர் துளையிடப்பட்டுள்ளது என்றார்.

17-வது நாள்! உத்தராகண்டில் சில்க்யாரா- பர்கோட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்படும் சுரங்கப் பாதையில் கடந்த 12-ம் தேதி மண் சரிவு ஏற்பட்டது. இதில் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்க 17-வது நாளாக இன்றும் (செவ்வாய்) மீட்புப் பணி தொடர்ந்து வருகிறது.

கவனம் பெற்றுள்ள எலி வளை சுரங்கப் பணியாளர்கள்: சுரங்கப் பாதை மணல் குவியலில் பக்கவாட்டில் தொடர்ந்து துளையிட டெல்லியில் இருந்து 24 சிறப்பு தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டனர். மெலிந்த தேகம், உயரம் குறைவான இவர்கள் சமதளம், மலைப்பகுதியில் எலிவளை போல குடைந்து சிறியஅளவிலான சுரங்கம் தோண்டுவதில் கைதேர்ந்தவர்கள். இதன்காரணமாக ‘எலி வளை' தொழிலா ளர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

இந்த குழுவைச் சேர்ந்த முன்னா கூறியதாவது: ராக்வெல் என்ற நிறுவனத்தில் நாங்கள் பணியாற்றி வருகிறோம். ஏற்கெனவே இயந்திரம் மூலம் பொருத்தப்பட்ட 47 மீட்டர் இரும்பு குழாயில் ஒரே நேரத்தில் 2 பேர் நுழைந்து சிறிய ரக இயந்திரங்களால் சுரங்கத்தை தொடர்ந்து தோண்டுவோம். இதன்படி 24 மணி நேரமும் சுரங்கத்தை தோண்ட முடிவு செய்துள்ளோம்.

திங்கள்கிழமை இரவு பணியைத் தொடங்கி உள்ளோம். எவ்வித தடங்கலும் ஏற்படவில்லை என்றால் அடுத்த 24 மணி நேரம் முதல் 36 மணி நேரத்துக்குள் மீதமுள்ள 13 மீட்டர் தொலைவையும் தோண்டி குழாய்களை பொருத்திவிடுவோம். இதன்பிறகு இரும்பு குழாய் பாதை வழியாக 41 தொழிலாளர்களையும் எளிதாக மீட்க முடியும். இவ்வாறு முன்னா கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x