Published : 28 Nov 2023 06:10 AM
Last Updated : 28 Nov 2023 06:10 AM
டேராடூன்: உத்தராகண்டில் சில்க்யாரா- பர்கோட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்படும் சுரங்கப் பாதையில் கடந்த 12-ம் தேதி மண் சரிவு ஏற்பட்டது. இதில் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்க 16-வது நாளாக நேற்றும் மீட்புப் பணி தொடர்ந்தது.
சுமார் 60 மீட்டர் தொலைவுக்கு மணல், கடினமான பாறைகள் சுரங்கத்தை மூடியிருக்கிறது. இதில் அமெரிக்க தயாரிப்பு இயந்திரம் மணல் குவியலின் பக்கவாட்டில் 47 மீட்டர் தொலைவுக்கு துளையிட்டு இரும்பு குழாய்களை பொருத்தியது. இன்னும் 13 மீட்டர் தொலைவுக்கு துளையிட வேண்டிய நேரத்தில் இயந்திரம் உடைந்தது. அந்த இயந்திர கழிவுகளை அகற்றுவதில் நிபுணத்துவம் பெற்ற 7 பேர் குழு மும்பையில் இருந்து வரவழைக்கப்பட்டது. அந்தகுழுவினர் அமெரிக்க இயந்திரத்தின் 14 மீட்டர் நீளம் கொண்ட பிளேடு கழிவுகளை சேகரித்து அகற்றினர்.
இதைத் தொடர்ந்து சுரங்கப் பாதை மணல் குவியலில் பக்கவாட்டில் தொடர்ந்து துளையிட டெல்லியில் இருந்து 24 சிறப்பு தொழிலாளர்கள் வரவழைக் கப்பட்டு உள்ளனர். மெலிந்த தேகம், உயரம் குறைவான இவர்கள் சமதளம், மலைப்பகுதியில் எலிவளை போல குடைந்து சிறியஅளவிலான சுரங்கம் தோண்டுவதில் கைதேர்ந்தவர்கள். இதன்காரணமாக ‘எலி வளை' தொழிலா ளர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
இந்த குழுவைச் சேர்ந்த முன்னா கூறியதாவது: ராக்வெல் என்ற நிறுவனத்தில் நாங்கள் பணியாற்றி வருகிறோம். ஏற்கெனவே இயந்திரம் மூலம் பொருத்தப்பட்ட 47 மீட்டர் இரும்பு குழாயில் ஒரே நேரத்தில் 2 பேர் நுழைந்து சிறிய ரக இயந்திரங்களால் சுரங்கத்தை தொடர்ந்து தோண்டுவோம். இதன்படி 24 மணி நேரமும் சுரங்கத்தை தோண்ட முடிவு செய்துள்ளோம்.
திங்கள்கிழமை இரவு பணியைத் தொடங்கி உள்ளோம். எவ்வித தடங்கலும் ஏற்படவில்லை என்றால் அடுத்த 24 மணி நேரம் முதல் 36 மணி நேரத்துக்குள் மீதமுள்ள 13 மீட்டர் தொலைவையும் தோண்டி குழாய்களை பொருத்திவிடுவோம். இதன்பிறகு இரும்பு குழாய் பாதை வழியாக 41 தொழிலாளர்களையும் எளிதாக மீட்க முடியும். இவ்வாறு முன்னா தெரிவித்தார்.
இதற்கிடையில் சுரங்கப் பாதையின் மேல் பகுதியில் இருந்து 86 மீட்டருக்கு செங்குத்தாக துளையிடும் பணியில் 36 மீட்டர் ஆழத்துக்கு இதுவரை துளையிடப்பட்டு உள்ளது. சுரங்கத்தின் அடிப்பாகம் வரை துளையிட்டு தொழிலாளர்களை நெருங்க வரும் 30-ம் தேதி வரை ஆகும் என்று மீட்புப் பணி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேசிய பேரிடர் மீட்புப் படை வட்டாரங்கள் கூறும்போது, “மீட்புப்பணி நடைபெறும் இடத்தில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. மோசமான வானிலையில் மீட்புப் பணியை விரைவுப்படுத்தி வருகிறோம். சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களின் உடல்நிலை, மனநிலை ரோபோடிக்ஸ் தொழில்நுட்பம் மூலம் கண்காணிக்கப்படுகிறது’’ என்று தெரிவித்தன.
குழாய் வழியாக தொழிலாளர்களுக்கு லட்டு: தமிழகத்தின் திருச்செங்கோட்டை சேர்ந்த தரணி ஜியோ டெக் நிறுவன நிபுணர்கள், உத்தராகண்டின் சில்க்யாரா சுரங்கப் பாதையில் அதிநவீன இயந்திரம் மூலம் 6 அங்குலம் விட்டம் கொண்ட குழாயை தொழிலாளர்கள் இருக்கும் இடம் வரை பொருத்தி உள்ளனர். இதனால் கடந்த 21-ம் தேதி முதல் தொழிலாளர்களுக்கு சமைத்த உணவு வகைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
தொழிலாளர்களுக்கு நேற்று காலை ரொட்டி, தானியங்களால் தயாரிக்கப்பட்ட சத்தான கஞ்சி, அவித்த முட்டை வழங்கப்பட்டன. அதோடு 41 பாக்கெட்டுகளில் சுவையான லட்டுகளும் குழாய் வழியாக அனுப்பப்பட்டன. ஒவ்வொரு பாக்கெட்டிலும் 4 லட்டுகள் வைக்கப்பட்டன.
மீட்புப் படை அதிகாரிகள், உறவினர்களுடன் பேச வசதியாக பிஎஸ்என்எல் சார்பில் தொழிலாளர்களுக்கு தொலைபேசி வசதி செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தொலைபேசி குழாய் வழியாக சுரங்கத்துக்குள் செலுத்தப்பட்டது.
பிரதமரின் முதன்மை செயலாளர் சுரங்க தொழிலாளர்களிடம் நலம் விசாரித்தார்: சில்க்யாரா சுரங்கப் பாதையில் நடைபெறும் மீட்புப் பணிகளை பிரதமர் மோடியின் முதன்மை செயலாளர் பி.கே.மிஸ்ரா, உள்துறை செயலாளர் அஜய் கே பல்லா, உத்தராகண்ட் தலைமைச் செயலாளர் சாந்தனு ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பி.கே. மிஸ்ரா, சிறப்பு தொலைபேசி வாயிலாக சுரங்கத்தில் சிக்கியிருக்கும் தொழிலாளர்களிடம் நலம் விசாரித்தார். அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டினார். அந்த தொழிலாளர்களின் உறவினர்களிடமும் அவர் கலந்துரையாடினார். மீட்புப் பணியின் நிலை, அவர்களுக்கு வழங்கப்படும் உணவு வகைகள் குறித்து மீட்புப் பணி அதிகாரிகளிடம் பி.கே. மிஸ்ரா கேட்டறிந்தார். இதுதொடர்பாக பிரதமர் மோடியிடம் அவர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT