Published : 28 Nov 2023 06:33 AM
Last Updated : 28 Nov 2023 06:33 AM

திருப்பதி ஏழுமலையான் தரிசனத்தின்போது 140 கோடி இந்தியர்களின் நலனுக்காக பிரார்த்தனை: வலைதளத்தில் பிரதமர் மோடி பதிவு

பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள், அர்ச்சகர்கள் கோயில் முகப்பு வாசல் அருகே பூரண கும்ப மரியாதை அளித்து தரிசன ஏற்பாடுகளை செய்தனர்.

திருமலை: திருப்பதி ஏழுமலையானிடம் 140கோடி இந்தியர்கள் நீண்ட ஆயுள், ஆரோக்கியத்துடன் வாழ வேண்டுமென கூறி பிரார்த்தனை செய்ததாக பிரதமர் மோடி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன் தினம் தெலங்கானா மாநிலம் மேதக் மாவட்டத்தில் நடந்த தேர்தல்பிரச்சாரக் கூட்டத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். இரவு ஹைதராபாதில் இருந்துசிறப்பு விமானம் மூலம் திருப்பதியில் உள்ள ரேணிகுண்டா விமானநிலையத்துக்கு வந்தார். அவரை ஆந்திர ஆளுநர் அப்துல் நஸீர், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிஉட்பட எம்பிக்கள், உயர் அதிகாரிகள், பாஜக முக்கிய நிர்வாகிகள் என பலர் வரவேற்றனர்.

பின்னர் காரில் திருமலைக்கு சென்ற பிரதமர் மோடிக்கு, திருப்பதி நகரில் பொதுமக்கள் மற்றும் பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து, அவர் ஞாயிற்றுக்கிழமை இரவு திருமலையில் தங்கினார்.

இந்நிலையில், நேற்று காலை பிரதமர் நரேந்திர மோடி, திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் கோபுர முகப்பு வாசலில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் தேவஸ்தான அதிகாரிகள் தரிசன ஏற்பாடுகளை செய்தனர். இதனை தொடர்ந்து, கோயிலில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் பிரதமருக்கு தீர்த்த,பிரசாதங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. பின்னர் அவர் காரில் ரேணிகுண்டா விமான நிலையம் சென்று, அங்கிருந்து விமானம் மூலம் தெலங்கானாவில் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஹைதராபாத் சென்றார்.

பிரதமர் எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில், “140 கோடி இந்தியர்களின் நலன், அவர்களின் ஆரோக்கியம் மற்றும் வளமான வாழ்க்கைக்காக பிரார்த்தனை செய்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி வருகையையொட்டி, திருப்பதி மற்றும் திருமலையில் கடந்த 2 நாட்களாக பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x