Published : 31 Jan 2018 04:40 PM
Last Updated : 31 Jan 2018 04:40 PM

இந்தியா அகதிகளின் உலக தலைநகரமாக மாறுவதை விரும்பவில்லை: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டம்

அகதிகளுக்கான உலக தலைநகரமாக இந்தியா மாறுவதை விரும்பவில்லை என்று ரோஹிங்கிய முஸ்லிம்கள் குறித்த வழக்கு ஒன்றில் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

மியான்மரில் படுபயங்கர அடக்குமுறைகளுக்கு அஞ்சி அங்கிருந்து தப்பி அகதிகளாக இந்தியா வருபவர்களை எல்லைப் பாதுகாப்புப் படையினர் திருப்பி அனுப்பிவிடுவதாக உச்ச நீதிமன்றத்தில் ரோஹிங்கிய முஸ்லிம்கள் சார்பில் மனு செய்யப்பட்டிருந்தது, அதில் கிரெனேட் தாக்குதல் மிளகாய்ப்பொடித் தூவல் தாக்குதல் ஆகியவற்றிலிருந்து தப்பித்து ரோஹிங்கியர்கள் நாடு நாடாக அகதிகளாக வெளியேறி வருகின்றனர்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வின் முன் விசாரணைக்கு வந்தபோது, “அகதிகளின் உலகத் தலைநகரமாக இந்தியா மாறுவதை விரும்பவில்லை. ஒவ்வொரு மற்ற நாடுகளிலிருந்தும் இந்தியாவுக்கு கூட்டமாக வருகிறார்கள்” என்று கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா அமர்வின் முன் தெரிவித்தார்.

இது குறித்து அரசு பேச்சு வார்த்தைகளில் இருப்பதாகவும் அரசு முடிவெடுக்க அனுமதிக்க வேண்டுமென்றும் இப்போது இது அவரசமல்ல என்றும் இப்போதைக்கு நீதிமன்றம் இதில் தலையிடுமளவுக்கான விஷயம் அல்ல என்றும் அவர் நீதிமன்ற அமர்வின் முன் தெரிவித்தார்.

அகதிகள் பிரதிநிதி வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் அகதிகள் சார்பில் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளிக்க அவகாசம் தேவை என்றும் மேத்தா தெரிவித்தார். இதனையடுத்து அடுத்த வழக்கு விசாரணை மார்ச் 7-ம் தேதியன்று நடைபெறும் அப்போது பதில் அளிக்க நீதிமன்ற அமர்வு அவகாசம் அளித்தது.

கடும் அடக்குமுறைகளிலிருந்தும் மரணங்களிலிருந்தும் தப்பிக்க இங்கு அகதிகளாக வருபவர்களைத் திருப்பி அனுப்புவது இந்தியாவின் பன்னாட்டு மனிதார்த்த கடமைகளுக்கு எதிராக உள்ளது என்று கூறிய பிரசாந்த் பூஷன், இந்தியாவில் ரோஹிங்கியர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள அகதிகள் முகாம் படு இழிவான நிலையில் இருப்பதாகவும் அகதிகள் படு மோசமான வறுமையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

பிரசாந்த் பூஷன் வாதங்களை ஏற்றுக் கொண்டார் அமர்வு நீதிபதி சந்திராசூட், ஏற்கெனவே இருக்கும் அகதிகளுக்கான நீதித்துறை விதிகள் புதிதாக உள்ளே வருபவர்களுக்குமானதுதானா என்று கேட்டார்.

இந்நிலையில் இடையீடு செய்த ராஜீவ் தவான் என்ற மூத்த வழக்கறிஞர், “நம் எல்லைக்கு ஒருவர் வந்து நான் அகதி என்கிறார் என்று வைத்துக் கொள்வோம் அவர் உண்மையில் அகதிதானா என்பதை உறுதி செய்ய வேண்டியுள்ளது. அவரை அப்படியே கேள்வியின்றி திருப்பி அனுப்ப முடியாது. பிறகு அகதிகள் நிர்ணயத்தில் இந்தியாவின் கடப்பாடு என்ன? அகதி நிர்ணய உரிமையை பல்வேறு உயர் நீதிமன்றங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன. அரசு இதனை ராஜீய ரீதியாக கையாளட்டும், ஆனால் நீதிமன்றமும் இதில் தன்னிச்சையாக முடிவெடுக்க வேண்டும்” என்றார்.

“மரணத்தின் கோரப்பற்களுக்கு அவர்களை திருப்பி அனுப்ப முடியாது”

மூத்த வழக்கறிஞர் அஸ்வினி குமார், இவரும் அகதிகள் சார்பில் வாதிடும்போது, “எல்லையில் அகதிகளுக்காக குறைந்தபட்ச மனிதார்த்த அறம் காக்கப்பட வேண்டும்” என்றார்.

“நாம் அவர்களை மரணத்தின் கோரப்பற்களுக்கு மீண்டும் திருப்பி அனுப்ப முடியாது, உயிர்வாழ்வதற்கான உரிமையை நாம் மறுக்க முடியாது. உயிரைப் பாதுகாப்பவராக உச்ச நீதிமன்றம் இதில் தலையிட்டாக வேண்டும்” என்றார் அஸ்வினி குமார்.

தேசிய மனித உரிமை ஆணையத்திற்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம் எல்லையில் வரும் அகதிகளை எப்படி கையாள்வது என்பது ராஜீய ரீதியாக தீர்க்கப்பட வேண்டும் என்றார்.

தேசிய நலன்களுடன் மனிதார்த்த மாண்புகளையும் காக்கும் ஒரு சமச்சீரான பார்வையை நீதிமன்ற விரும்புவதாக அமர்வு தெரிவித்தது.

40,000 ரோஹிங்கியர்களை திருப்பி அனுப்புவதற்கு எதிராக செய்யப்பட்ட ஏகப்பட்ட மனுக்களை கோர்ட் விசாரணைக்கு எடுத்துக்கொண்டு விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x