Published : 27 Nov 2023 07:46 PM
Last Updated : 27 Nov 2023 07:46 PM

உத்தராகண்ட் சுரங்க விபத்து | ஆட்களால் துளையிடும் பணிகள் விரைவில் தொடங்கும்: அதிகாரிகள் தகவல்

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியின் சில்க்யாரா சுரங்கத்தினுள் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கையாக செங்குத்தாக துளையிடும் பணிகள் நடந்து வரும் நிலையில், பக்கவாட்டிலிருந்து ஆட்கள் மூலம் துளையிடும் பணிகள் விரைவில் தொடங்கும் என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் பணிகளில் நிகழ்ந்துவரும் சமீபத்திய தகவல்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர் ஓய்வு பெற்ற லெப்டினட் ஜெனரல் சைது அதா ஹஸ்னைன், "ரேட் ஹோல் மைனிங் எனப்படும் சிறிய அளவிலான துளையிடும் தொழிலாளர்கள் விரைவில் துளையிடும் பணியினைத் தொடங்க உள்ளனர். இடிபாடுகளில் சிக்கியிருந்த துளையிடும் இயந்திரத்தின் துண்டுகள் ஹைதராபாத்திலிருந்து கொண்டுவரப்பட்ட பிளாஸ்மா கட்டரின் உதவியுடன் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. இரண்டு வாரங்களுக்கு மேலாக சுரங்கத்தினுள் சிக்கியிருக்கும் 41 தொழிலாளர்களை பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் மீட்பதில் அரசு முழு உறுதியுடன் செயல்படுகிறது. மீட்பு நடவடிக்கையில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன" என்றார்.

தொழிலாளர்களை மீட்பதில் செங்குதாகவும், பக்கவாட்டில் ஆட்கள் மூலமாக துளையிடும் இரண்டு வழிமுறைகளில் கவனம் குவிக்கப்பட்டுள்ளது. சுரங்கப் பாதை நிறைவு பெறும் பார்கோட் பகுதியில் இருந்து துளையிட்டு வரும் பிற முயற்சிகளும் செயல்பாட்டில் உள்ளன. சுரங்கத்துக்குள் சிக்கியிருக்கும் தொழிலாளர்கள் வெளியேறுவதற்கு மொத்தம் 86 மீட்டர் தூரம் செங்குத்தாக துளையிட வேண்டும். சிக்கியிருக்கும் தொழிலாளர்களிடம் சென்றடைவதற்கான இரண்டாவது வாய்ப்பாக சுரங்கத்தின் உச்சியில் இருந்து செங்குத்தாக 1.2 மீட்டர்களுக்கு குழாய் பதிக்க வேண்டும்.

இதனிடையே, பிரதமரின் முதன்மைச் செயலாளர் பி.கே. சர்மா, உள்துறைச் செயலாளர் அஜய் கே பல்லா மற்றும் உத்தராகண்ட் தலைமைச் செயலாளர் எஸ்.எஸ்.சாந்து ஆகியோர் நடந்து வரும் மீட்பு பணிகளை ஆய்வு செய்தனர்.

முன்னதாக, உத்தராகண்டில் சில்க்யாரா - பர்கோட் இடையே அமைக்கப்படும் சுரங்கப் பாதையில் கடந்த 12-ம்தேதி மண் சரிவு ஏற்பட்டது. இதில்,41 தொழிலாளர்கள் சுரங்கப் பாதைக்குள் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்பதற்காக, அமெரிக்க தயாரிப்பான ஆகர் இயந்திரம் மூலம் பக்கவாட்டில் துளையிடப்பட்டது. ஆனால், அந்த இயந்திரத்தின் பிளேடு, கம்பிகளில் சிக்கி உடைந்து சுரங்கப் பாதையில் சிக்கிக் கொண்டது. இதனால், அந்த இயந்திரத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, பக்கவாட்டில் துளையிடும் முயற்சி கைவிடப்பட்டது.

அதற்குப் பதிலாக, சுரங்கத்தின் மேல் பகுதியில் இருந்து செங்குத்தாக துளையிட்டு, தொழிலாளர்களை மீட்க திட்டமிடப்பட்டது. செங்குத்தாக துளையிடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதில் இதுவரை 31 மீட்டர் செங்குத்து துளையிடப்பட்டுள்ளதாக மீட்புக் குழு தெரிவித்திருந்தனர். தொழிலாளர்களை மீட்கும் பணி 16-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x