Published : 27 Nov 2023 05:24 PM
Last Updated : 27 Nov 2023 05:24 PM
நாக்பூர்: 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் விவாதித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்று மகாரஷ்டிர துணை முதல்வருள் ஒருவரான தேவிந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். மாநிலத்தில் உள்ள 48 மக்களவைத் தொகுதிகளில் 26-ல் பாஜக போட்டியிடும் எனக் கூறிய சில நாட்களுக்கு பின்னர் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா துணை முதல்வரும், அம்மாநில மூத்த பாஜக தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் திங்கள்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பாஜக 26 இடங்களில் போட்டியிடும் என்று கூறியது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த பட்னாவிஸ், "கூட்டணி கட்சியினருடன் இன்னும் பேச்சுவார்த்தை தொடங்கவில்லை. அவர்களுடன் கலந்தாலோசித்த பின்னரே தொகுதி பங்கீடு குறித்த பார்முலா உருவாக்கப்படும். ஒரு குறிப்பிட்டத் தொகுதியில் அவர்கள் (கட்சியினர்) ஏற்கெனவே போட்டியிட்டிருந்தால் அந்த இடங்களில் மீண்டும் அவர்களே மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். தொகுதிப் பங்கீடு பார்முலா என்பது நிலையானதாக இருக்க முடியாது. கூட்டணிக் கட்சியினருடன் விவாதித்து தேவையான மாற்றங்களைச் செய்வோம்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, அஜித் பவார் அணி தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏகளுக்கு எதிரான தகுதி நீக்க மனுக்கள் மீதான சபாநாயகரின் விசாரணை குறித்த கேள்விக்கு பதில் அளிக்கும்போது, "தகுதி நீக்க விசாரணை என்பது பாதி நீதித் துறை போன்றது. சபாநாயகருக்கு தீர்பாயங்களின் அந்தஸ்தும் உண்டு. அதனால், அதுகுறித்து கருத்து சொல்வது சரியாக இருக்காது” என்று தெரிவித்தார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத் பவார், அஜித் பவார் அணியினர் ஒருவர் மற்றவர் மீது கொடுத்த தகுதி நீக்க புகார் குறித்த விசாரணையில் தங்கள் தரப்பு விளக்கத்தை இரு அணியினரும் சமீபத்தில் சபாநாயகர் ராகுல் நர்வேகரிடம் சமர்ப்பித்தனர்.
மகாராஷ்டிராவில் தற்போது முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா அணி, பாஜக மற்றும் தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் அணி) ஆகியவை இணைந்த மகாயுதி கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இதில் கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக மற்றும் சிவசேனா (பிளவுபடாத முந்தைய கட்சி) 41 தொகுதிகளில் போட்டியிட்டன. அதில் முறையே 23 மற்றும் 18 இடங்களில் இரு கட்சிகளும் வெற்றி பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT