Published : 27 Nov 2023 04:41 PM
Last Updated : 27 Nov 2023 04:41 PM
புதுடெல்லி: முஸ்லிம்களுக்காக ஐடி பார்க் உருவாக்குவேன் என சாத்தியமில்லாத வாக்குறுதியை தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் கூறி இருக்கிறார் என்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவரும், துணை முதல்வருமான டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வரும் ராஜஸ்தான் உள்பட 5 மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. முஸ்லிம்களுக்காக ஐடி பார்க் உருவாக்கப்படும் என தெலங்கானா முதல்வர் கேசிஆர் வாக்குறுதி அளித்துள்ளது குறித்து கேட்கிறீர்கள். அது எப்படி சாத்தியமாகும்? சிறுபான்மையினருக்காக என்று தனியாக ஐடி பார்க் அமைக்க முடியுமா? ஒட்டுமொத்த நாட்டிலும் இதுபோன்ற ஒரு கொள்கையை நான் வேறு எங்கும் கேட்டதில்லை.
நீங்கள் இளைஞர்களுக்காக, பெண்களுக்காக என்று கொள்கைகளை வகுக்கலாம். சாதிவாரியாக மக்களை பாகுபடுத்த முடியாது. கேசிஆர் பலவீனமாக தன்னை உணருகிறார் என்பதையே இது காட்டுகிறது. இளைஞர்கள், குழந்தைகள், பெண்கள் ஆகியோர் தங்களை சாதி ரீதியாக அடையாளப்படுத்திக்கொள்வது இல்லை. நீங்கள் சிறுபான்மையினரை, பட்டியல் சமூகத்தவர்களை ஊக்குவிக்கலாம். ஆனால், அவர்களுக்கென்று தனியாக ஐடி பார்க் உருவாக்க முடியாது" என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தெலங்கானா கல்வி அமைச்சர் சபிதா இந்திரா ரெட்டி போட்டியிடும் மாகேஸ்வரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய கேசிஆர், "பிஆர்எஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், முஸ்லிம் மாணவர்கள் தங்கி படிக்கும் பள்ளிக் கூடங்கள் திறக்கப்படும். மேலும், முஸ்லிம் இளைஞர்களுக்கு என்று தனியாக ஐடி பார்க் உருவாக்கப்படும். இந்த ஐடி பார்க், ஹைதராபாத் அருகே பஹடி ஷரீஃப் பகுதியில் அமைக்கப்படும். காங்கிரஸ் ஆட்சியின்போது தெலங்கானாவில் இருக்கும் சிறுபான்மையினருக்காக ரூ.2 ஆயிரம் கோடி மட்டுமே செலவிடப்பட்டது. பிஆர்எஸ் ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் ரூ.12 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது" என தெரிவித்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT