Published : 27 Nov 2023 02:47 PM
Last Updated : 27 Nov 2023 02:47 PM

“தெலங்கானாவில் பாஜக வென்றால் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்தான் முதல்வர்'' - பிரதமர் மோடி உறுதி

மெகபூபாபாத்: தெலங்கானாவில் பாஜக வெற்றி பெற்றால் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்தான் முதல்வராக தேர்வு செய்யப்படுவார் என்று பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்துள்ளார்.

தெலங்கானாவில் வரும் 30-ம் தேதி சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரம் நாளை மாலையுடன் முடிவுக்கு வருகிறது. இந்நிலையில், இன்று காலை திருப்பதிக்கு வந்து வெங்கடாலஜபதி கோயிலில் சாமி தரிசனம் செய்த நரேந்திர மோடி, இதன் தொடர்ச்சியாக மெகபூபாபாத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், "தெலங்கானாவில் பாஜக புதிய வரலாறு படைக்க இருக்கிறது. இந்தத் தேர்தலின் மூலம் பாஜக முதல்முறையாக தெலங்கானாவில் ஆட்சி அமைக்க இருக்கிறது. அதற்கு பாஜகவை ஆசீர்வதிக்கவே, இங்கு நீங்கள் பெரும் எண்ணிக்கையில் இங்கு வந்திருக்கிறீர்கள்.

மூன்று நாட்களாக தொடர்ச்சியாக தெலங்கானாவில் நான் பிரச்சாரம் செய்து வருகிறேன். இன்றுடன் எனது இறுதிக்கட்டப் பிரச்சாரம் நிறைவடைகிறது. இந்த 3 நாட்களாக மிகப் பெரிய எண்ணிக்கையிலான மக்கள் முன்னிலையில் பேசுவதை எனக்கு கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பாகக் கருதுகிறேன். முதல்வர் கேசிஆர் அரசை தெலங்கானாவில் இருந்து அகற்றுவதற்கு மக்கள் தயாராகி இருக்கிறார்கள்.

தெலங்கானாவை அழித்த பாவத்தை செய்தவர்கள் கேசிஆரும், காங்கிரஸும். எனவே, ஒரு நோயை ஒழித்துவிட்டு மாற்றாக மற்றொரு நோயை மக்கள் கொண்டு வர மாட்டார்கள். பாஜக மீது தெலங்கானா மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். மாநிலத்தின் எல்லா பகுதிகளிலும் இதை நான் காண்கிறேன். தெலங்கானாவின் அடுத்த முதல்வர் பாஜகவைச் சேர்ந்தவர்தான் என்பதில் நீங்கள் உறுதியாக இருக்கிறீர்கள். அதேபோல், பாஜகவும் உங்களுக்கு ஓர் உறுதியை அளிக்கிறது. பாஜகவின் முதல்வர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராகத்தான் இருப்பார்.

பாஜக குறுகிய காலத்தில் மிகப் பெரிய வளர்ச்சி பெற்றுவிட்டதை முதல்வர் கேசிஆர் உணர்ந்துவிட்டார். நீண்ட காலத்துக்கு முன், பாஜக உடன் நட்பு கொள்ள அவர் முயன்றார். ஒரு முறை டெல்லி வந்து இதை என்னிடம் அவர் தெரிவித்தார். ஆனால், தெலங்கானா மக்களின் விருப்பத்துக்கு மாறாக பாஜக எதையும் செய்யாது என நான் சொல்லிவிட்டேன். இதையடுத்தே, கேசிஆர் கட்சி, என்னை தொடர்ந்து விமர்சித்து வருகிறது. பிஆர்எஸ் கட்சியின் பிடியில் இருந்து தெலங்கானாவை விடுவிப்பதே பாஜகவின் லட்சியம். பாஜக ஆட்சி அமைந்ததும், கேசிஆர் செய்த அத்தனை ஊழல்கள் குறித்தும் விசாரணை நடத்தப்படும்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x