Published : 27 Nov 2023 12:10 PM
Last Updated : 27 Nov 2023 12:10 PM
ஹைதராபாத்: தெலங்கானாவில் ’ரிது பந்து’ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்க கேசிஆர் அரசுக்கு கொடுத்த அனுமதியை தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை திரும்பப் பெற்றுள்ளது.இந்தத் திட்டம் குறித்து ஆளுங்கட்சி அமைச்சர் அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் மீறிப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.
தெலங்கானாவில் விவசாய செலவுகளை சந்திக்கவும், பயிர் உற்பத்தியைப் பெருக்கும் வகையிலும் விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கும் வகையில் கடந்த 2018-ம் ஆண்டு ’ரிது பந்து’ திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் ராபி பருவத்துக்கு ரூ.5,000 பணம் வழங்கப்பட்டடு வருகிறது.
இந்தாண்டு அக்டோபர் - ஜனவரி பருவத்துக்கான தொகையினை வழங்குவதற்கு தெலங்கானாவின் கேசிஆர் அரசுக்கு தலைமை தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி இருந்ததது. என்றாலும் தேர்தல் நடத்தை விதி நடைமுறைக்கு வந்த பின்னர் பணப்பட்டுவாடா குறித்து விளம்பரப்படுத்த வேண்டாம் என்று அரசிடம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தெலங்கானா மாநில நிதியமைச்சரும், பிஆர்எஸ் கட்சி வேட்பாளருமான ஹரிஷ் ராஜ் ’ரிது பந்து. திட்டத்தின் கீழ் பணப்பட்டுவாடா குறித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். இதனை கவனத்தில் எடுத்துக்கொண்ட தேர்தல் ஆணையம் தான் வழங்கிய அனுமதியை திரும்பப் பெறுவதாகவும், விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்குவதை நிறுத்த வேண்டும் என்று மாநில அரசிடம் தெரிவித்திருக்கிறது.
இதுகுறித்த அறிக்கையில், "தெலங்கானா மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அதன் அனைத்து வடிவங்களில் நடைமுறைப்படுத்தப்பபடுவதை உறுதி செய்யும் வகையில், ’ரிது பந்து’ திட்டத்தின் கீழ் பணப்பட்டுவாடா செய்யப்படுவது நிறுத்தப்படுகிறது" என்று தெரிவித்துள்ளது. இந்த அனுமதி திரும்பப் பெறுவது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளது.
தெலங்கானாவில் உள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் 30 (வியாழக்கிழமை) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் பிஆர்எஸ், காங்கிரஸ், பாஜகவுக்கு இடையே கடும் போட்டி நிலவுவதாகக் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT