Published : 26 Nov 2023 04:55 AM
Last Updated : 26 Nov 2023 04:55 AM
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் 199 தொகுதிகளில் நேற்று ஒரே கட்டமாக நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் 70% சதவீத வாக்குகள் பதிவாகின.
ராஜஸ்தானில் மொத்தம் உள்ள 200 சட்டப்பேரவை தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. கங்காநகர் மாவட்டத்தின் காரன்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் இறந்ததால், அந்த தொகுதியில் மட்டும் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. சட்டப்பேரவை தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் 51,756 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5.25 கோடி. இந்த தேர்தலில் 1,862 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தேர்தல் பாதுகாப்பு பணியில் 1.70 லட்சத்துத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் ஈடுபட்டனர். இங்கு வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காலையில் இருந்தே மக்கள் உற்சாகத்துடன் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
மாநில முதல்வர் அசோக் கெலாட், மத்திய அமைச்சர்கள் கஜேந்திர சிங் செகாவத், கைலாஷ் சவுத்ரி, முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, துணை முதல்வர் சச்சின் பைலட் ஆகியோர் தங்களது வாக்குச் சாவடிக்கு நேற்று காலையிலேயே வந்து வாக்குகளை பதிவு செய்தனர். வாக்களித்த அனைவரும் தங்களது கட்சி வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தனர்.
ஜோத்பூரில் வாக்களித்த முதல்வர் அசோக் கெலாட் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘‘காங்கிரஸ் ஆட்சிக்கு எதிரான மனநிலை மக்களிடையே காணப்படவில்லை. அதனால், ராஜஸ்தானில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும்’’ என்றார்.
ஜலாவரில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, ‘‘ராஜஸ்தானில் பாஜகவுக்கு சாதகமான சூழல் நிலவுகிறது. டிச.3-ம் தேதி இங்கு தாமரை மலரும்’’ என்றார்.
ராஜஸ்தானில் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இங்கு ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஒருமுறை ஆட்சி மாறுவது வழக்கம். கடந்த 25 ஆண்டுகளாக ஆட்சி மாற்றம்தான் வழக்கமாக இருந்து வந்துள்ளது. ஆனால், இந்த முறை ஆட்சியை தக்கவைப்போம் என காங்கிரஸ் நம்புகிறது. ராஜஸ்தானில் அடுத்த ஆட்சியை அமைக்க பாஜகவும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
பிரச்சாரத்தின்போது முதல்வர் அசோக் கெலாட் தனது அரசின் திட்டங்களை எடுத்துக்கூறி மக்களிடம் வாக்கு சேகரித்தார். காங்கிரஸ் ஆட்சியில் நடந்த பெண்களுக்கு எதிரான குற்றங்கள், ஊழல் ஆகியவற்றை எடுத்துக்கூறி பாஜக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டது.
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ராஜஸ்தான் முழுவதும் தேர்தல் ஆணையம் தீவிர ஏற்பாடுகளை செய்திருந்தது. ராஜஸ்தானில் உள்ள முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் 61,021 பேர் ஏற்கெனவே வீட்டில் இருந்து வாக்களித்துவிட்டனர்.
பதற்றமான வாக்குச் சாவடிகளில் அதிரடிப் படையினர் பாதுகாப்புடன், வெப் கேமிரா ஒளிபரப்பு வசதியும் செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 276 இடங்களில் துணை ராணுவப் படையினர் சோதனை சாவடிகளை அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
ராஜஸ்தான் தேர்தலில் 65,277 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், 67,580 விவிபாட் (வாக்குகளை சரிபார்க்கும்) இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன என்று தலைமை தேர்தல் அதிகாரி குப்தா தெரிவித்தார். தேர்தல் நியாயமாக நடைபெற, 6,287 மேற்பார்வையாளர்கள், 6,247 அதிகாரிகள் மாநிலம் முழுவதும் நியமிக்கப்பட்டிருந்தனர்.
தேர்தல் பணியில் 2,74,846 ஊழியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். பெண்களால் நிர்வகிக்கப்பட்ட வாக்குச் சாவடிகளில் 7,960 பெண் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர். மாற்றுத் திறனாளிகள் நிர்வகிக்கும் வாக்குச் சாவடிகளில் 796 மாற்றுத் திறனாளி ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர். நேற்று மாலை 6 மணி வரை வாக்குச் சாவடி மையங்களுக்கு வந்தவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். இந்த தேர்தலில் மொத்தம் 70 சதவீத வாக்குகள் பதிவானது. ராஜஸ்தானில் நேற்று பதிவான வாக்குகள் டிசம்பர் 3-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
கடந்த 2018-ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் வாக்குப்பதிவு 74.72 சதவீதமாக இருந்தது. அப்போது காங்கிரஸ் 100 இடங்களிலும், பாஜக 73 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன. கடந்த 2013-ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 163 இடங்களில் வென்றது குறிப்பிடத்துக்கது.
பிரதமர் வாழ்த்து: ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் நேற்று வெளியிட்ட செய்தியில், ‘‘ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும். முதல் முறையாக வாக்களிக்கும் இளம் வாக்காளர்களுக்கு வாழ்த்துகள்’’ என தெரிவித்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT