Published : 26 Nov 2023 06:12 AM
Last Updated : 26 Nov 2023 06:12 AM

சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்பதில் பின்னடைவு: அமெரிக்க இயந்திரம் உடைந்தது

கோப்புப்படம்

டேராடூன்: உத்தராகண்டில் சில்க்யாரா- பர்கோட் இடையே அமைக்கப்படும் சுரங்கப் பாதையில் கடந்த 12-ம் தேதி மண்சரிவு ஏற்பட்டது. இதில் 41 தொழிலாளர்கள் சுரங்கப் பாதைக்குள் சிக்கிக் கொண்டனர்.

அவர்களை மீட்க ராட்சத இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு மணல் குவியலின் பக்கவாட்டில் துளையிடப்பட்டன. கடினமான பாறைகளை துளையிட முடியாமல் பல்வேறு இயந்திரங்கள் பழுதாகின. அமெரிக்க தயாரிப்பு ஆகர் இயந்திரம் மட்டும் பக்கவாட்டில் துளையிட்டு தொடர்ந்து முன்னேறியது.

சுமார் 60 மீட்டர் தொலைவுக்கு மணல், பாறைகள் சுரங்கப் பாதையை மூடியிருக்கிறது. இதில் அமெரிக்க இயந்திரம் பக்கவாட்டில் 47 மீட்டர் தொலைவுக்கு துளையிட்டு இரும்பு குழாய்களை பொருத்தியது. இன்னும் 14 மீட்டர் தொலைவுக்கு துளையிட வேண்டிய நேரத்தில் அளவுக்கு அதிகமான வேகத்தில் அமெரிக்க இயந்திரம் இயக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன்காரணமாக அந்த இயந்திரம் உடைந்து சுரங்கப் பாதையில் சிக்கிக் கொண்டுள்ளது. இதனால் மீட்பு பணியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் ஆஸ்திரேலிய சுரங்க நிபுணர் அர்னால்டு டிக்ஸ் கூறியதாவது:

அமெரிக்க தயாரிப்பு ஆகர்இயந்திரத்தை மீண்டும் பயன்படுத்த முடியாது. புதிய ஆகர் இயந்திரம் மூலம் துளையிட வாய்ப்பில்லை. எனவே மாற்று வழிகள் குறித்து ஆலோசித்து வருகிறோம். சுரங்கத்தின் மேற்பகுதியில் இருந்து அடிப்பாகம் வரை செங்குத்தாக துளையிட்டு தொழிலாளர்களை மீட்க திட்டமிடப்பட்டு உள்ளது. வேறு சிலதிட்டங்களையும் பரிசீலித்துவருகிறோம். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள். இவ்வாறு அர்னால்டு டிக்ஸ் தெரிவித்தார்.

மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் தேசிய பேரிடர் மீட்புப் படை வட்டாரங்கள் கூறியதாவது:

சுரங்க பாதையில் சிக்கியிருக்கும் தொழிலாளர்கள் மூலம்உள்ளே இருந்து தோண்டலாமா என்பது குறித்து பரிசீலிக்கப்பட்டது. ஆனால் இது மிகவும் ஆபத்தானது. உள்ளே மண் சரிவு ஏற்பட்டால் மிகப்பெரிய சிக்கல் ஏற்படும்.

எனவே சுரங்கப் பாதையின் மேற்பகுதியில் இருந்து அடிப்பாகம் வரை செங்குத்தாக துளையிட திட்டமிடப்பட்டு உள்ளது. மேலிருந்து அடிப்பாகம் வரை 86 மீட்டர் ஆழத்துக்கு துளையிட வேண்டும். இதிலும் சிக்கல்கள் உள்ளன. சுரங்க பாதையில் உட்பகுதியில் மண் சரிவு ஏற்படாத வகையில் துளையிட வேண்டும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழக நிபுணர்கள்: தமிழகத்தின் திருச்செங் கோட்டை சேர்ந்த தரணி ஜியோ டெக் நிறுவனம் உத்தராகண்ட் சுரங்கப் பாதை மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கிறது. கடந்த 21-ம் தேதி இந்த நிறுவன நிபுணர்கள், பிஆர்டி-ஜிடி5 என்ற இயந்திரத்தின் மூலம் மணல் குவியலை துளையிட்டு 6 அங்குலம் விட்டம் கொண்ட குழாயை தொழிலாளர்கள் இருக்கும் இடம் வரை செலுத்தினர். இது மீட்புப் பணியில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

அதுவரை மிகச் சிறிய குழாய்கள் வழியாக ஆக்சிஜன் மற்றும்உலர் பழங்கள் மட்டுமே தொழிலாளர்களுக்கு அனுப்பப்பட்டு வந்தன. தற்போது தமிழக நிபுணர்கள் பொருத்திய பெரிய குழாய் வழியாக ரொட்டி, கிச்சடி உள்ளிட்ட சமைத்த உணவு வகைகள் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதோடு டிஆர்டிஓ-வின் அதிநவீன கேமரா மூலம் 41 தொழிலாளர்களும் பாதுகாப்பாக இருப்பது கண்காணிக்கப்பட்டு வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x