Published : 25 Jan 2018 09:31 PM
Last Updated : 25 Jan 2018 09:31 PM
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 29ம்தேதி தொடங்க உள்ள நிலையில், அதற்கு முந்தைய நாள் (28ம்தேதி) அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அழைப்பு விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வரும் பட்ஜெட் கூட்டத்தொடரை சூமூகமான முறையில் நடத்தவும், தேக்கமடைந்து இருக்கும் மசோதாக்களை நிறைவேற்றவும் எதிர்க்கட்சிகளிடம் ஒத்துழைப்பு கோரி இந்த கூட்டத்தை சுமித்ரா மகாஜன் கூட்டியுள்ளார்.
முஸ்லிம் பெண்கள் திருமணப்பாதுகாப்பு சட்ட மசோதா அல்லது முத்தலாக் மசோதா, நிதி தீர்வு மற்றும் வைப்புத்தொகை காப்பீடு மசோதா ஆகிய இரு மசோதாக்களையும் எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. இதில் முத்தலாக் தடைச் சட்ட மக்களவையில் நிறைவேறிவிட்டநிலையில், மாநிலங்கள் அவையில் நிறைவேறவில்லை அதை நிறைவேற்ற ஒத்துழைப்பு கோரப்படும்.
பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 29-ந்தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இருஅவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார். அன்றைய தினமே பொருளாதார ஆய்வு அறிக்கையை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்கிறார்.
பிப்ரவரி 1ந்தேதி நாடாளுமன்றத்தில் 2018-19ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்கிறார். முதல் பிரிவு பட்ஜெட் கூட்டத் தொடர் இம்மாதம் 29ம் தேதி தொடங்கி, பிப்ரவரி 5-ந்தேதி வரை நடக்கிறது. அதன்பின் 23 நாட்கள் இடைவெளிக்கு பின், மார்ச் 5ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 6ம் தேதி வரை நடக்கிறது.
மத்தியில் ஆளும் பா.ஜனதா கட்சி தாக்கல் செய்யும் முழுமையான மற்றும் கடைசி பட்ஜெட் இதுவாகும். அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் வரும் என்பதால், செலவினத்துக்கான இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே தாக்கல் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT