Published : 25 Nov 2023 09:05 PM
Last Updated : 25 Nov 2023 09:05 PM

‘கேள்விக்கு லஞ்சம்’ விவகாரம்: மஹுவா மொய்த்ரா மீதான லோக்பால் புகார் மீது சிபிஐ ஆய்வு

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் அதானிக்கு எதிராக கேள்வியெழுப்ப தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் திரிணமூல் எம்பி மஹுவா மொய்த்ரா லஞ்சம் பெற்றது தொடர்பான குற்றச்சாட்டு குறித்து லோக்பால் அமைப்பு அளித்த புகார் மீது சிபிஐ ஆய்வு நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது, மவுஹா மொய்த்ராவுக்கு எதிரான முதற்கட்ட விசாரணை இல்லை என்றும், லோக்பால் பரிந்துரைத்த புகார் பற்றி மட்டுமே ஆய்வு நடப்பதாகவும் சிபிஐ அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேற்கு வங்கத்தின் கிருஷ்ணாநகர் மக்களவைத் தொகுதியின் திரிணமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா. இவர் மக்களவையில் இதுவரை 61 கேள்விகளை எழுப்பியுள்ளார். இதில் 50 கேள்விகள் அதானி குழுமம் தொடர்பானவை. இந்த கேள்விகளை எழுப்ப ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் இருந்து மொய்த்ரா ரூ.2 கோடி வரை லஞ்சமாக பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும், மொய்த்ராவின் நாடாளுமன்ற இணைய கணக்கை துபாயில் வசிக்கும் ஹிராநந்தானி பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

மொய்த்ராவின் முன்னாள் காதலர் ஜெய் ஆனந்த் தேஹத்ராய் இந்த ரகசியத்தை அம்பலப்படுத்தினார். இதை ஆதாரமாக வைத்து பாஜக எம்பி நிஷிகாந்த் துபே மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் புகார் அளித்தார். இதுதொடர்பாக நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு விசாரணை நடத்தி, மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரை செய்தது.

நெறிமுறைக் குழு விசாரணையில் பங்கேற்ற மஹுவா பாதியிலேயே வெளியேறினார். மேலும், நெறிமுறைக் குழு தலைவர் அநாகரீகமான கேள்விகளை எழுப்புவதாக குற்றம் சாட்டினார். ஆனால், உண்மையான கேள்விகளுக்கு பதிலளிப்பதை தவிர்ப்பதற்காகவே மஹுவா இந்த நாடகத்தை ஆடியதாகவும், இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அவருக்கு துணை போனதாகவும் நெறிமுறைக் குழு தலைவர் குற்றம் சாட்டியிருந்தார்.

நாடாளுமன்ற நெறிமுறைகள் குழுவின் பரிந்துரை வரும் குளிர்கால கூட்டத் தொடரில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பரிந்துரை குறித்து மக்களவையில் வாக்கெடுப்பு நடத்தப்படும். பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவுடன் பரிந்துரை நிறைவேற்றப்பட்டால், மஹுவா மொய்த்ராவின் எம்பி பதவி பறிக்கப்படும்.

இதனிடையே, நாடாளுமன்றத்தில் அதானிக்கு எதிராக கேள்வியெழுப்ப தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் திரிணமூல் எம்பி மஹுவா மொய்த்ரா லஞ்சம் பெற்றது தொடர்பான குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க சிபிஐக்கு லோக்பால் உத்தரவிட்டது.

அதை வரவேற்பதாக தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்ட மவுஹா மொய்த்ரா, “ரூ.13,000 கோடி மதிப்புள்ள நிலக்கரி ஊழல் தொடர்பாக அதானியிடம் முதலில் சிபிஐ விசாரணை நடத்தி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யட்டும். பிறகு இங்கு வந்து எனது காலணிகளை அவர்கள் எண்ணலாம்” என்று குறிப்பிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.

இதனிடையே, மஹுவா மொய்த்ரா விவகாரத்தை தொடர்ந்து எம்பிக்கள் கேள்வி எழுப்புவது தொடர்பான புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளதும் கவனிக்கத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x