Published : 25 Nov 2023 03:43 PM
Last Updated : 25 Nov 2023 03:43 PM
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் அரசு மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றும், மோடியின் பேச்சில் எந்தவொரு பொருளும் கிடையாது என்றும் அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் சட்டப்பேரவை தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 200 சட்டப்பேரவை தொகுதிகளில், காரன்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் இறந்ததால், 199 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் இடையே தீவிர போட்டி நிலவி வருகிறது. மத்திய அமைச்சர்கள் கஜேந்திர சிங் ஷெகாவத், அர்ஜூன் ராம் மேக்வால், முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா, முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜ்யவர்த்தன் ரத்தோர், பாஜக மாநில தலைவர் சி.பி. ஜோஷி உள்ளிட்டோர் காலையிலேயே வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை செலுத்தினர்.
இந்த நிலையில் , முதல்வர் அசோக் கெலாட் சர்தார்புரா தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிக்கு சென்று தனது வாக்கைப் பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அசோக் கெலாட், “ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் அரசு மீண்டும் ஆட்சிக்கு வரும். மோடியின் பேச்சில் எந்தவொரு பொருளும் கிடையாது. இது மாநில சட்டமன்றத் தேர்தல், மோடியின் தேர்தல் அல்ல. நாங்கள் மக்களோடு துணையாக இருப்போம். ஆனால், பாஜகவினரை இனி இங்கு பார்க்கக் கூட முடியாது” என்றார்.
இதையடுத்து, சர்தார்புராவில் வாக்களித்த பின்னர் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட் கூறுகையில், "மாநிலத்தில் காங்கிரஸுக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று நம்புகிறேன். மாநிலத்தில் தாங்கள் தோல்வியடைவோம் என்பதை அறிந்த பாஜக பதற்றமடைந்துள்ளது" என்றார். பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா ஆகியோர் ரெட் டைரியை முன்னிறுத்தி ராஜஸ்தானில் பிரச்சாரம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT