Published : 25 Nov 2023 12:19 PM
Last Updated : 25 Nov 2023 12:19 PM

“சில மணி நேர மழைக்கே சென்னை மிதக்கிறது” - அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: "சென்னையில் இன்று அதிகாலை ஒருசில மணி நேரம் பெய்த மழையால் மயிலாப்பூர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. தமிழக அரசு இது தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சென்னையில் இன்று அதிகாலை ஒருசில மணி நேரம் பெய்த மழையால் மயிலாப்பூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், அசோக்நகர், தியாகராயநகர், தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் வெளியே வர முடியவில்லை என்பதால் அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது.

சென்னையில் சிறிதளவு மழை பெய்தால் கூட, மாநகரத்தின் பெரும்பான்மையான பகுதிகள் மிதப்பது தீராத சிக்கலாக தொடர்கிறது. 2021-ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் சென்னையில் மழைநீர்த் தேக்கம் வரலாறு காணாத அளவுக்கு மோசமான கட்டத்தை அடைந்ததால், மழைநீர் தேங்குவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைக்க பேரிடர் மேலாண்மை வல்லுனர் திருப்புகழ் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. அக்குழுவினர் ஆய்வு செய்து அளித்த அறிக்கையின் அடிப்படையில் சென்னை மாநகரத்தில் 800 கி.மீக்கும் கூடுதலான தொலைவுக்கு மழைநீர் வடிகால்கள் புதிதாக அமைக்கப்பட்டன. பல இடங்களில் இந்தப் பணிகள் இன்னும் தொடர்கின்றன.

மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடைந்தால், சென்னையில் மழைநீர் தேங்காது என்று பலரும் நம்பிக் கொண்டிருந்த நிலையில், அந்த நம்பிக்கை இன்றைய மழையில் பொய்த்துப் போயிருக்கிறது. மழைநீர் வடிகால்கள் அமைக்கப்படுவதற்கு முன்பாக ஒவ்வொரு பகுதியிலும் எந்த அளவுக்கு தண்ணீர் தேங்கி நின்றதோ, இப்போது அதில் 50% முதல் 70% அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. சாதாரண மழைக்கே இந்த அளவு தண்ணீர் தேங்கி நிற்கிறது என்றால், 2021-ஆம் ஆண்டில் பெய்ததைப் போன்று மிகக் கடுமையான மழை தொடர்ந்து பெய்தால் சென்னை மாநகரின் நிலை என்னவாகும் என்பது தெரியவில்லை. சில மணி நேர மழைக்கே சென்னை மிதக்கிறது .

மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் அவற்றை அகற்றும் பணிகளில் சென்னை மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது என்பதை மறுக்க முடியாது. ஆனால், மழை நீரை விரைவாக அகற்றுவதை விட, மழை நீரே தேங்காத நிலையை ஏற்படுத்துவது தான் சிறந்த மேலாண்மைக்கு அடையாளம் ஆகும். சென்னை மாநகரை சிங்காரச் சென்னையாக மாற்றுவதை விட, மழைநீர் தேங்காத மாநகரமாக மாற்றுவது தான் மிகவும் அவசியம் ஆகும். அதற்கான பணிகளை சென்னை மாநகராட்சியும், தமிழக அரசும் மேற்கொள்ள வேண்டும்.

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் முதல் கட்டமாக முடிக்கப்பட்ட பிறகு இப்போது தான் ஓரளவு மழை பெய்துள்ளது. இந்த மழையால் பெருக்கெடுத்த தண்ணீரை வெளியேற்ற மழைநீர் வடிகால்கள் திணறுகின்றன என்பது தான் உண்மை. எனவே, மழைநீர் வடிகால்களின் அமைப்பு, அமைக்கப்படும் முறை ஆகியவற்றை ஆய்வு செய்து, தேவையான மாற்றங்களை செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, சென்னையில் மழைநீர் தேங்குவதை தடுப்பதற்கான திருப்புகழ் குழுவினரின் பிற பரிந்துரைகளையும் விரைந்து செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x