Published : 25 Nov 2023 04:38 AM
Last Updated : 25 Nov 2023 04:38 AM
பரேலி: விற்பனையை அதிகரித்து ஆதாயம் அடையும் நோக்கிலேயே நிறுவனங்கள் உணவுப் பொருட்களுக்கு ஹலால் சான்றிதழை வழங்குவதாக உத்தர பிரதேச மாநிலம் ஆலா ஹஸ்ரத் தர்காவைச் சேர்ந்த மதகுரு மவுலானா ஷஹாபுதீன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: ஹலால் சான்றிதழ் ஷரியா வழிகாட்டுதல்களை பூர்த்தி செய்வதில்லை. நுகர்வோரை ஏமாற்றுவதன் மூலம் தயாரிப்பு மற்றும் விற்பனையை அதிகரிக்கவே ஒரு ஸ்மார்ட் மார்க்கெட்டிங் கருவியாக இதுபோன்ற சான்றிதழ்களை நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. சிறுபான்மை சமூகத்தை ஏமாற்றி அவர்கள் பணம் சம்பாதித்து வருகின்றனர். எனவே, அவற்றுக்கு தடை விதித்தது சரியான நடவடிக்கையே.
ஹலால் சான்றிதழ்கள் பொதுவாக அசைவப் பொருட்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் சிலர், தேன், பிஸ்கட், காய்கறிகள் உள்ளிட்ட பிற பொருட்களுக்கும் ஹலால் டேக் பயன்படுத்துகின்றனர். இது, முற்றிலும் தவறான நடவடிக்கை. எனவே, ஹலால் சான்றிதழை தடை செய்யும் அரசின் முடிவை முஸ்லிம் மக்கள் தங்களுக்கு எதிரான நடவடிக்கை என நினைத்து குழப்பமடைய வேண்டாம். அரபு நாடுகள் தங்களுக்கு தேவையான இறைச்சியை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கின்றன. அதன் காரணமாகவே அவர்கள் ஹலால் என்ற சொல்லை பயன்படுத்துகின்றனர். இந்தியாவுக்கு அது தேவையில்லை. இவ்வாறு ஷஹாபுதீன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT