Published : 25 Nov 2023 05:37 AM
Last Updated : 25 Nov 2023 05:37 AM
புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் ‘காசி தமிழ்ச் சங்கமம்-2’ நடைபெற உள்ளது. கடந்த முறையை போல், மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் டிசம்பரில் 15 நாட்களுக்கு நடத்தப்பட உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடியின் யோசனைப்படி, காசி தமிழ்ச் சங்கமம் கடந்த வருடம் நடைபெற்றது. இதற்காக தமிழகத்தில் இருந்து பல்வேறு தரப்பை சேர்ந்த 2,500 பேர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர்.
இதுதவிர ஆயிரக்கணக்கானோர் தங்கள் சொந்த செலவில் வந்திருந்தனர். இதன்மூலம், உ.பி.யின் புனித நகரமான காசி எனும் வாரணாசியுடன் தமிழர்களுக்கு உள்ள தொடர்பு நினைவு கூரப்பட்டது. இந்நிலையில், கடந்த முறையை போல் ‘காசி தமிழ்ச் சங்கமம்-2’ நடைபெற உள்ளது. இதையும் உ.பி. அரசுடன் இணைந்து மத்திய கல்வி அமைச்சகம் நடத்துகிறது. ஆனால், இது பாதி நாட்கள் குறைக்கப்பட்டு, டிசம்பர் 15 முதல் 31 வரை நடைபெறுகிறது. இதில் மக்கள் கலந்துகொள்ள வசதியாக 12 சிறப்பு ரயில்கள் சென்னை, ராமேஸ்வரம் மற்றும் மதுரையில் இருந்து புறப்படுகின்றன. இதற்காக, சென்னை ஐஐடி இணையதளத்தில் முன்பதிவு செய்பவர்களில் 3,000 பேர் தேர்வு செய்யப்பட்டு, காசி அழைத்து வரப்பட உள்ளனர்.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’யிடம் முதல் காசி தமிழ்ச் சங்கமத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்த பாஜகவின் ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவின் தமிழகத் தலைவர் எம்.நாச்சியப்பன் கூறும்போது, “கடந்த முறை சுமார் 32,000 பேர் பதிவு செய்திருந்தனர். சுமார் 12 லட்சம் பார்வையாளர்கள் கண்டு களித்தனர். பிரதமரின் ஒரே பாரதம் உன்னத பாரதம் கொள்கையை அமலாக்கும் விதத்தில், காசி நிகழ்ச்சியின் தாக்கம் வேறுபல பெயர்களில் ஏழு இடங்களில் நடைபெற்றன” என்று தெரிவித்தார்.
மேலும், இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’யிடம் மத்திய கல்வி அமைச்சக வட்டாரம் கூறும்போது, “இரண்டாவது காசி தமிழ்ச் சங்கத்திற்கான முதல் ஆலோசனைக் கூட்டம் காணொலி மூலம் கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. மத்திய கல்வி அமைச்சகத்தின் செயலாளர் கே.சஞ்சய் மூர்த்தி, வாரணாசி ஆட்சியர் எஸ்.ராஜலிங்கம், இந்த நிகழ்ச்சியின் தேசிய அமைப்பாளரான பேராசிரியர் சாமு கிருஷ்ண சாஸ்திரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இரண்டாவது காசி தமிழ்ச் சங்கமத்தில் சில மாற்றங்கள் செய்யவும் இக்கூட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்.
இரண்டாவது சங்கமத்தில் கலந்துகொள்பவர்களுக்கு அனைத்து வகையான இந்திய உணவும் பரிமாறப்பட உள்ளது.
திருநெல்வேலியின் கடையநல்லூரை சேர்ந்த அதிகாரி ராஜலிங்கம் யோசனைப்படி கங்கையின் நமோ கரையில் இந்த சங்கமம் நடைபெற உள்ளது. இது, நகரின் மத்தியப் பகுதியில் இருப்பதால், முதல் நிகழ்ச்சி நடைபெற்ற பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்திற்கு வந்ததை விட அதிக பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் சங்கமத்தில் இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி, காசி விஸ்வநாதர் கோயிலில் நடைபெற்றது.
கடந்த முறையை போலவே, தமிழக மடங்களின் ஆதினங்களுக்கு இதில் முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது. காசி தமிழ்ச் சங்கமத்தின் பலன் தங்கள் கட்சிக்கு மக்களவைத் தேர்தலில் கிடைக்கும் என பாஜக எதிர்பார்க்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT