Published : 24 Nov 2023 04:55 PM
Last Updated : 24 Nov 2023 04:55 PM

“உச்ச நீதிமன்ற தீர்ப்பின் ஒவ்வொரு வரியையும் தமிழக ஆளுநர் ரவி படிக்க வேண்டும்” - ப.சிதம்பரம்

ப.சிதம்பரம்

புதுடெல்லி: தமிழகம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் முதல்வர் - ஆளுநர் இடையிலான மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், பஞ்சாப் ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பின் ஒவ்வொரு வரியையும் ஆளுநர் ஆர்.என். ரவி படிக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் முதல்வர் - ஆளுநர் இடையிலான மோதல் போக்கு கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த நிலையில், பஞ்சாப் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுக்கிறார் என அம்மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிராக ஆம் ஆத்மி அரசு, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘சட்டப்பேரவைகளின் சட்டமியற்றும் அங்கீகாரத்தை நசுக்குகின்ற வகையில் ஆளுநரின் அதிகாரம் பயன்படுத்தப்படக் கூடாது’ என உத்தரவிட்டுள்ளது. அதோடு தனது கண்டனத்தையும் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில், “ஆளுநரின் அதிகாரங்கள் குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு என்பது பஞ்சாப் ஆளுநருக்கு மட்டுமல்லாமல், அனைத்து ஆளுநர்களுக்குமான கண்டனம் ஆகும். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, நீதிமன்ற தீர்ப்பின் ஒவ்வொரு வரியையும் படித்துவிட்டு, அது அவசியம் என நினைத்தால் திறமையான மூத்த வழக்கறிஞர் ஒருவரை வைத்து நீதிமன்றத்தின் தீர்ப்பை விளக்கமாகத் தெரிந்துகொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் - ஆளுநர் மோதல்: தமிழக சட்டப்பேரவையில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக பல்வேறு சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டன. ஆனால், 10-க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்நிலையில், சட்ட மசோதாக்களுக்கு அனுமதியளிப்பதற்கு ஆளுநருக்கு கால நிர்ணயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பும் மசோதாவை கிடப்பில் போடுவது கவலைக்குரியது என்று தெரிவித்தது. எதுவும் செய்யாமல் கோப்புகளைக் கிடப்பில் போட முடியாது என்றும் கருத்து தெரிவித்தது.

இந்தச் சூழலில், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு நிலுவையில் உள்ளதாக தெரிவித்த பல்கலைக்கழகங்கள் திருத்த மசோதா உள்ளிட்ட 10 மசோதாக்களை தமிழக அரசுக்கு ஆளுநர் திருப்பி அனுப்பினார். இதனையடுத்து, தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் கடந்த 18-ம் தேதி கூட்டப்பட்டு முதல்வர் கொண்டுவந்த அரசின் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்மூலம் அந்த 10 மசோதாக்களும் மீண்டும் நிறைவேற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x