Published : 24 Nov 2023 02:48 PM
Last Updated : 24 Nov 2023 02:48 PM
ஜெய்ப்பூர்: ராஸ்தான் காங்கிரஸில் உட்கட்சி பூசல் நிலவுகிறது என்ற கருத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, முதல்வர் அசோக் கெலாட், கட்சியின் மற்றொரு முக்கியத் தலைவரான சச்சின் பைலட் வாக்காளர்களிடம் வாக்கு கேட்கும் வீடியோ ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கு நாளை (சனிக்கிழமை) தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. மாநிலத்தில் ஆட்சியைத் தக்க வைக்க காங்கிரஸ் கட்சியும், மீண்டும் ஆட்சியைப் பிடிக்க பாஜகவும் தீவிரமாக முயன்று வருகின்றன. இந்த நிலையில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் பதவியைப் பிடிப்பதில் போட்டி நிலவுவதாகவும், அக்கட்சியின் இரண்டு முக்கிய தலைவர்களுக்கு இடையே பூசல் இருப்பதாகவும் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மாநில முதல்வர் அசோக் கெலாட், முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட், வாக்காளர்களிடம் வாக்கு சேகரிக்கும் 30 விநாடி வீடியோ ஒன்றை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "காங்கிரஸின் இளைய தலைவர் சச்சின் பைலட் ராஜஸ்தான் மக்களிடம் காங்கிரஸுக்கு வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இடையேயான பழைய சம்பவங்களைக் குறிப்பிட்டு பேசும் போது, "அவை கடந்த கால நிகழ்வுகள். நாங்கள் (காங்கிரஸ் தேசிய தலைவர்) மல்லிகார்ஜுன கார்கேவையும் ராகுல் காந்தியையும் சந்தித்தோம். கட்சி கவலைகளை கணக்கில் எடுத்துக்கொண்டது. கட்சி மேலிடம் என்னிடம் அனைத்தையும் மன்னித்து மறந்து அடுத்தகட்டத்துக்குச் செல்லுங்கள் என்று கூறியிருக்கிறது என்று சச்சின் தெரிவித்திருந்தார். அவரிடம் முதல்வர் அசோக் கெலாட் ‘நிகாம்மா’ போன்ற வார்த்தைகளை பயன்படுத்தியது கூறித்து கேட்டபோது, "அதனை விடுங்கள். யார் என்ன சொன்னார்கள்... நான் சொன்னவைகளுக்கு தான் நான் பொறுப்பாக முடியும் மற்றவர்கள் சொன்னதற்கு பதில் சொல்ல முடியாது. நாம் அரசியலில் நாகரீகத்தை கடைபிடிக்க வேண்டும்" என்றார்.
அதேபோல், சச்சின் பைலட் ஆதரவாளர்களுக்கு தேர்தலில் சீட் ஒதுக்க காலதாமதம் ஆனது குறித்த கேள்விகளை முதல்வர் அசோக் கெலாட்டும் எதிர்கொண்டார். இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள முதல்வர், "சீட் ஒதுக்கும் விஷயத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் ஏன் கருத்துவேறுபாடு எழவில்லை என்பதே எதிர்க்கட்சிகளின் கவலையாக உள்ளது. நீங்கள் சச்சின் பைலட் பற்றி பேசுகிறீர்கள் என்று நினைக்கிறேன். அனைவரின் விருப்பத்தின் படிதான் எல்லா முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.
முன்னதாக ராஜஸ்தானில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது, காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் வெளியில் தங்களுக்குள் கை குலுக்கிக் கொண்டாலும் உள்ளுக்குள் இருவருக்கும் இடையில் பூசல் இருப்பதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியிருந்தார். பிரச்சாரத்தில் அவர் பேசும் போது, இப்போது நாட்டு மக்கள் அனைவரும் கிரிக்கெட் உற்சாகத்தில் மூழ்கி உள்ளனர். கிரிக்கெட் ஆட்டத்தில் ஒரு அணியைச் சேர்ந்த பேட்ஸ்மேன்கள் தங்கள் அணிக்காக ரன் குவிப்பதில் ஈடுபடுவார்கள். ராஜஸ்தான் காங்கிரஸும் கிரிக்கெட் அணியைப் போன்றதுதான். ஆனால், ஒரே கிரிக்கெட் அணியின் வீரர்கள் ஒருவரை ஒருவர் ரன் அவுட் செய்ய முயற்சிப்பது போல செயல்படுகின்றனர். கடந்த 5 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியும் இப்படி ஒருவரை ஒருவர் ரன் அவுட் செய்வதிலேயே முடிந்துவிட்டது" என்று கூறியிருந்தார்.
கெலாட் vs சச்சின்: அசோக் கெலாட், சச்சின் பைலட் இருவருக்குமான ஊடல் கடந்த 2020 ஆம் ஆண்டில் தொடங்கியது. அப்போது ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசின் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட், 18 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் கெலாட் தலைமையிலான அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் துணைமுதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதிலிருந்து கெலாட், பைலட் இடையே மோதல் போக்கு நிலவியது. அசோக் கெலாட் சச்சின் பைலட்டை துரோகி, உபயோகமற்றவர் என்று கடுமையாக விமர்சனம் செய்தார். இந்த நிலையில் சச்சின் பைலட் இந்த ஆண்டு தொடக்கத்தில் கெலாட் அரசுக்கு எதிராக ஊழல் எதிர்ப்பு யாத்திரை நடத்தினார்.
कांग्रेस के युवा नेता सचिन पायलट जी की राजस्थान के लोगों से कांग्रेस को वोट देने की अपील।@SachinPilot#कांग्रेस_की7गारंटी#कांग्रेस_फिर_से pic.twitter.com/3bS1PaOhbg
— Ashok Gehlot (@ashokgehlot51) November 24, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT