Published : 24 Nov 2023 01:50 PM
Last Updated : 24 Nov 2023 01:50 PM
நிஜாமாபாத்: "நாடு முழுவதும் பி.ஆர்.எஸ் அரசின் புகழ் வளர்ந்து வருகிறது. இதை இரண்டு கட்சிகளாலும் ஜீரணிக்க முடியவில்லை" என தெலங்கானா முதல்வரும், பாரத் ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் தலைவருமான கே.சந்திரசேகர ராவின் மகள் கவிதா தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலத்தில் ஆளும் பிஆர்எஸ், காங்கிரஸ் மற்றும் பாஜக இடையேயான மும்முனைப் போட்டி நிலவி வருகிறது. நவம்பர் 30ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3ஆம் தேதி நடைபெறும். இதையொட்டி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் களம் இறங்கியிருக்கின்றனர்.
இந்த நிலையில், தெலங்கானா முதல்வரும், பாரத் ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் தலைவருமான கே.சந்திரசேகர ராவின் மகள் கவிதா, நிஜாமாபாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ கடந்த 10 ஆண்டுகளாக ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியுடன் நல்ல நட்பு ரீதியான (friendly party) அணுமுறையை கடைபிடித்து வருகிறோம். ஆனால் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் வேறு எந்த அரசியல் கட்சியும் ஆட்சிக்கு வருவதை விரும்பவில்லை. நாடு முழுவதும் பி.ஆர்.எஸ் அரசின் புகழ் வளர்ந்து வருகிறது. தெலங்கானா மாநிலத்தால் நாட்டின் ஒட்டுமொத்த அரசியல் அமைப்பும் விவசாயிகளைப் பற்றி சிந்திக்கத் தொடங்கியிருக்கிறது.
இதை இரண்டு கட்சிகளாலும் ஜீரணிக்க முடியவில்லை. நாங்கள் யாருடைய 'பி' அணியும் அல்ல, நாங்கள் தெலுங்கானா மக்களின் அணி. இங்கு மத அடிப்படையில் அரசியல் நடக்கவில்லை. தெலங்கானாவின் சமூக அமைப்பு வேறு. இம்மாநிலத்தின் வளர்ச்சி மீதுதான் எங்களுடைய அக்கறை இருக்கிறது. மக்களின் நிதி நிலையை அடிப்படையாக வைத்து இடஒதுக்கீட்டுக்கு பரிந்துரைகளை வழங்குகிறோம். எனவே, இரு கட்சிகளும் (காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க) தேவையற்ற பிரச்சனைகளை முன்வைத்து மக்களை பிரிவுபடுத்த முயல்கின்றன. இனியும் அசாத்தியமான வாக்குறுதிகளை அளித்து மக்களுக்கு துரோகம் செய்ய முடியாது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT