Published : 24 Nov 2023 01:29 PM
Last Updated : 24 Nov 2023 01:29 PM

சுரங்க மீட்பு பணி | உள்ளே சிக்கி இருப்பவர்களை ஸ்ட்ரெச்சரில் வெளியே அழைத்துவர NDRF ஒத்திகை

டேராடூன்: உத்தரகாசியில் சுரங்கப்பாதையில் சிக்கி உள்ளவர்களை சக்கர ஸ்ட்ரெச்சர்களைப் பயன்படுத்தி வெளியே அழைத்து வருவதற்கான ஒத்திகையை NDRF மேற்கொண்டது.

உத்தராகண்டில் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக உத்தரகாசி, யமுனோத்ரியை இணைக்கும் வகையில் சில்க்யாரா வளைவு - பர்காட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 12-ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் 60 மீட்டர் தொலைவு சுரங்கப் பாதையில் மண் சரிந்தது. இருபுறமும் மண் மூடிய நிலையில் சுரங்கப் பாதைக்குள் 41 தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர். அவர்களை வெளியே கொண்டு வருவதற்கான மீட்புப் பணியில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட நிபுணர்கள் இரவு பகலாக பாடுபட்டு வருகின்றனர்.

இடிபாடுகளுக்குள் 800 மிமீ விட்டம் கொண்ட குழாய் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு அதன்வழியாக, உள்ளே சிக்கி இருப்பவர்களை வெளியே அழைத்து வருவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த குழாய் வழியாக அவர்களே தவழ்ந்து வருவார்கள் என கூறப்பட்ட நிலையில், தற்போது சக்கரங்கள் பொறுத்தப்பட்ட ஸ்ட்ரெச்சர்கள் மூலம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான ஒத்திகையை NDRF இன்று மேற்கொண்டது.

சுரங்கப்பாதையின் வெளிப்பகுதியில் இருந்து கயிற்றில் கட்டப்பட்ட சக்கர ஸ்ட்ரெச்சரைத் தள்ளிக்கொண்டு ஒரு NDRF பணியாளர் அந்தப் பாதை வழியாகச் சென்றார். குழாய்க்குள் போதிய இடவசதி இருந்ததால், பயிற்சியின் போது மூச்சு விடுவதில் சிரமம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, மீட்புப் பணிகளை உன்னிப்பாகக் கண்காணிப்பதற்காக முதல்வர் புஷ்கர் சிங் தாமி, சில்க்யாரா அருகே தனது முகாம் அலுவலகத்தை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x