Published : 23 Nov 2023 05:52 PM
Last Updated : 23 Nov 2023 05:52 PM
கொல்கத்தா: “மஹுவா மொய்த்ராவை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்ற திட்டமிடப்படுகிறது. ஆனால், அது அவருக்கு சாதகமாவே அமையும்” என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். தனது கட்சி எம்.பி. மீதான சர்ச்சை குறித்து முதல்முறையாக அவர் கருத்து தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.
கொல்கத்தாவில் வியாழக்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், “மஹுவா மொய்த்ராவை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்ற திட்டமிடப்படுகிறது. ஆனால், அது தேர்தலுக்கு (2024 மக்களவைத் தேர்தல்) முன்பாக அவருக்கு உதவும். தற்போது எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைத்து ஓடும் மத்திய புலனாய்வு அமைப்புகள் 2024 தேர்தலுக்குப் பின்னர் பாஜகவை குறிவைக்கும். இந்த அரசு மத்தியில் இன்னும் 3 மாதங்களுக்கே ஆட்சியில் இருக்கும்" என்றார்.
நாடாளுமன்றத்தில் கேள்விகள் கேட்பதற்காக தொழிலதிபர் ஒருவரிடம் லஞ்சம் வாங்கினார் என்ற சர்ச்சை திரிணமூல் எம்.பி. மஹுவா மொய்த்ராவை பல வாரங்களாக சுற்றி வந்த நிலையில், அதுகுறித்து எதுவும் பேசாமல் மவுனமாவே மம்தா பானர்ஜி இருந்து வந்தார். இந்த விவகாரத்தில் திரிணமூல் எம்.பி. மொய்த்ராவை நாடாளுமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யலாம் என்று மக்களவை நெறிமுறைக் குழு பரிந்துரைத்திருக்கும் நிலையில், முதல்முறையாக மம்தா தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
முன்னதாக, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யான மஹுவா மொய்த்ரா மக்களவையில் இதுவரை கேட்ட 61 கேள்விகளில் 50 கேள்விகள் அதானி குழுமம் தொடர்பானவை. இந்தக் கேள்விகளை எழுப்ப ரியல் எஸ்டேட் தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் இருந்து மொய்த்ரா பெரும் தொகையை லஞ்சமாகப் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த விவகாரத்தில் மக்களவை நெறிமுறைக் குழு விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT