Published : 23 Nov 2023 01:29 PM
Last Updated : 23 Nov 2023 01:29 PM
டேராடூன்: உத்தராகண்ட் சுரங்கத்துக்குள் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணிகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், "நாங்கள் கதவின் முன்னால் நிற்கிறோம்.விரைவில் மீட்பு பணிகள் முடிவுக்கு வரும் என்று சர்வதேச சுரங்க நிபுணர் அர்னால்ட் டிக்ஸ் தெரிவித்துள்ளார்.
டிக்ஸ் சுரங்கத்தைச் சென்று அடந்த நிலையில், மீட்பு நடவடிக்கைகள் குறித்து விவரித்து அவர் கூறியதாவது,"தற்சமயம் நாம் கதவின் முன்பக்கம் இருக்கிறோம், அதை தட்டவும் போகிறோம். கதவின் அந்தப் பக்கம் நமது தோழர்கள் இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியும். நான் அங்கே சென்று என்ன நடக்கிறது என்று பார்க்கப் போகிறேன்" என்றார்.
பிரதமர் அலுவலக முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் பாஸ்கர் குல்பே கூறுகையில், "துளையிடும் பணிகள் முழுமையாக நிறைவடைந்து உள்ளே இருக்கும் தொழிலாளர்களை நெருங்குவதற்கு இன்னும் 12 முதல் 14 மணி நேரம் ஆகலாம். அதன்பின்னர் ஒவ்வொரு தொழிலாளர்களாக வெளியே மீட்டுக் கொண்டு வர மேலும் மூன்று மணி நேரங்கள் எடுக்கும். இந்தப்பணி தேசிய பேரிடர் மீட்பு படையின் உதவியுடன் செய்யப்படும்" என்றார்.
சுரங்கப் பாதைக்குள் சிக்கி இருக்கும் தொழிலாளர்களை மீட்கும் பணியில் சுரங்கத்துக்குள் 45 மீட்டர் தூரம் தோண்டிய நிலையில் மீட்புக் குழுவினர் பல்வேறு தடைகளைச் சந்தித்தனர். புதன்கிழமை அமெக்காவின் ஆஜர் எந்திரம் ஒரு இரும்புக் கம்பியில் தட்டி நின்றது. பின்னர் அந்தக் கம்பி அகற்றப்பட்டது. அதற்கு அடுத்த நாள் துளையிடும் எந்திரத்தின் பாதையில் ஒரு இரும்பு ராடு தடையை ஏற்படுத்தியது. அதுவும் அகற்றப்பட்டு மீட்புப் பணிகள் தொடர்ந்து வருகிறது.
இதனிடையே 41 தொழிலாளர்களும் மீட்கப்பட்ட பின்னர் அவர்களுக்கு உடனடியாக மருத்து உதவிகள் வழங்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து உத்தரகாசி காவல் கண்காணிப்பாளர் அர்பன் யதுவன்ஷி கூறுகையில், "தொழிலாளர்கள் மீட்கப்பட்ட பின்னர் எடுக்கப்படவேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளன. மீட்கப்படும் தொழிலாளர்கள் போலீஸாரின் துணையுடன் மருத்துவமனைக் கொண்டு செல்லப்பட்டு அவர்களுக்கு தேவையான சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். தொழிலாளர்கள் சின்யாலிசவுருக்கு கொண்டு செல்லப்படுவார்கள், தேவைப்பட்டால் ரிஷிகேஷுக்கு கொண்டு செல்லப்படலாம் என்று நான் கருதுகிறேன்" என்றார்.
உத்தராகண்ட் மாநிலம் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக சில்க்யாரா-பர்கோட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 12-ம் தேதி இந்த சுரங்கப் பாதையில் மண் சரிந்தது. இதன்காரணமாக சுரங்கப் பாதைக்குள் 41 தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் கடந்த 11 நாட்களாக பல்வேறு சிக்கல்களுக்கு நடுவில் மிகவும் தீவிரமாக நடந்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT