Published : 23 Nov 2023 11:44 AM
Last Updated : 23 Nov 2023 11:44 AM
புதுடெல்லி: பசுமைப் புரட்சி, மதிய உணவு போன்ற முன்னோடித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டபோது கே.சந்திரசேகர ராவ் எங்கே இருந்தார் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார். இந்திரா காந்தியின் ஆட்சி குறித்த கேசிஆரின் விமர்சனத்துக்கு பதிலடியாக கார்கே இவ்வாறு கேட்டுள்ளார்.
இந்த மாத இறுதியில் தேர்தல் நடக்க உள்ள தெலங்கானாவின் நல்கொண்டா மற்றும் ஆலம்பூர் ஆகிய இடங்களில் நடந்த காங்கிரஸின் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் கார்கே கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர்,"பசுமைப் புரட்சி, 20 அம்ச திட்டம், வங்கதேச விடுதலை இவைகளுடன் இந்திரா காந்தியின் ஆட்சியில் தலித்துகளுக்காக ஆதரவாக பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆனால் கேசிஆர் இந்திரா காந்தி மீதும் அவதூறு சொல்கிறார். இந்திரா காந்தி காலத்தின் வறுமை பற்றி சந்திரசேகர ராவ் கேள்வி எழுப்புகிறார். பசுமைப் புரட்சி, மதிய உணவு போன்ற பல்வேறு முன்னோடி திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட போது நீங்கள் எங்கே இருந்தீர்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் கேசிஆர். இதற்கெல்லாம் பதில் சொல்லாமல் அவர் மோடியுடன் அமர்ந்து கொண்டு அவதூறு மட்டும் பேசுகிறார்.
இந்த சட்டப்பேரவைத் தேர்தல் தெலங்கானா மக்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்று. இந்தத் தேர்தலில் நாங்கள் ஏழை மக்களின் நிலங்களைப் பறித்தவர்களுக்கு எதிராக போட்டியிடுகிறோம். தெலங்கானாவில் மக்கள் விரும்பும் வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை. சாலைவசதிகள், பள்ளிகள், நீர்பாசனத் திட்டங்கள் ஏதுவும் நிறைவேற்றப்பட்டவில்லை.
கேசிஆர் மக்களைச் சந்திக்காமல், அவரின் பண்ணை வீட்டில் இருந்து முடிவுகளை எடுக்கிறார். மக்களைச் சந்திக்காதவர்களுக்கு,அவர்களுடன் இல்லாதவர்களுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்.
கேசிஆர், பாஜக, அசாதுதீன் ஒவைசி ஆகியோர் நண்பர்கள். அவர்கள் மூவரும் ஒன்றிணைந்து காங்கிரஸுக்கு எதிராக வேலை செய்கிறார்கள். நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸின் தலைமை அலுவலகத்துக்கு சென்ற போது மோடியுடனான தனது நட்பினை தெரிவித்தார். ஒவைசி, கேசிஆர் அவரின் நல்ல நண்பர் என்று கேசிஆரை தொடர்ந்து புகழ்ந்து வருகிறார்" இவ்வாறு கார்கே பேசினார்.
முன்னதாக, பிஎஸ்ஆர் கட்சியின் பிரச்சாரக்கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை பேசிய மாநில முதல்வர் கேசிஆர், "காங்கிரஸ் கட்சியினர் மீண்டும் இந்திராம்மா ராஜ்ஜியத்தை கொண்டு வருவோம் என்று வாக்குறுதி தருகின்றனர். அந்த ஆட்சி அவசர நிலையால் மட்டுமே நினைவுகூறப்படுகிறது தலித்துகளின் நிலைமை இன்றும் அப்படியேதான் இருக்கின்றது என்று குற்றம்சாட்டியிருந்தார்.
தெலங்கானா மாநில சட்டப்பேரவைக்கு வரும் 30 ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குகள் எண்ணப்படுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT