Published : 23 Nov 2023 03:44 AM
Last Updated : 23 Nov 2023 03:44 AM

உத்தராகண்ட் சுரங்கப் பாதை | ”காலை 8 மணிக்குள் பணிகள் முடியலாம்” - தேசிய பேரிடர் மீட்பு படை நம்பிக்கை

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக சில்க்யாரா-பர்கோட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 12-ம் தேதி இந்த சுரங்கப் பாதையில் மண் சரிந்தது. அதனால் சுரங்கப் பாதைக்குள் 41 தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர். இவர்களை மீட்பதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

எப்படியும் அடுத்த சில மணி நேரங்களில் தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து தகவலை மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் அதிகாரி தெரிவித்துள்ளார். உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்கள் தொடர்பு கொண்டு வருவதாகவும், அவர்களுக்கு தேவையான உணவு வழங்கப்பட்டு வருகிறது. செங்குத்தாகவும், பக்கவாட்டிலும் துளையிடப்பட்டு வருகிறது. தொடர்ந்து இரும்பு குழாய்களும் அதில் பொருத்தப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் உள்ள சிக்கியுள்ள தொழிலாளர்கள் எந்த நேரத்திலும் மீட்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதால் சுரங்கப் பாதைக்கு வெளியே தயார் நிலையில் ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் மீட்கப்பட்டதும் அவர்களுக்கு வேண்டிய முதல் உதவி சிகிச்சையை அளிக்கும் வகையில் 41 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனை ஒன்று அங்கு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 30 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவக் கூடம் படுக்கை வசதிகளுடன் தயார் செய்யப்பட்டுள்ளது. சுரங்கப் பாதைக்குள் தேசிய மீட்புப் படை வீரர்களும் சென்றுள்ளனர்.

இதனிடையே, மீட்பு பணிகள் காலை 8 மணிக்குள் முடியும் என நம்புவதாக, தேசிய மீட்புப் படை உறுப்பினர்களில் ஒருவரான ஹர்பால் சிங் என்பவர் தெரிவித்துள்ளார். அதில், "ஆகர் இயந்திரத்தைப் பயன்படுத்தி துளையிட்டு வருகிறோம். 44 மீட்டர் வரை துளையிட்டு இரும்பு குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. இன்னும் 12 மீட்டர் தூரம் மட்டுமே துளையிட வேண்டியுள்ளது. துளையிடும்போது தடையாக சில இரும்புத் துண்டுகள் குறுக்கே வந்துள்ளன. அவற்றை காஸ் கட்டர் மூலம் அறுத்து அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. ஒரு மணி நேரத்திற்குள் இரும்புத் துண்டுகளை வெட்டி எடுக்கப்படும். அதன்பின் இரண்டு இரும்பு குழாய்களை உள்ளே தள்ளி காலை 8 மணிக்குள் மீட்புப் பணியை முடிக்க முடியும் என்று நம்புகிறோம். காலை 8 மணிக்குள் முழு மீட்பு பணியும் முடியலாம்" என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x