Published : 23 Nov 2023 07:46 AM
Last Updated : 23 Nov 2023 07:46 AM

ஒரு தரப்பை திருப்தி செய்யும் அரசியலையே காங்கிரஸ் எப்போதும் செய்து வருகிறது: அமித் ஷா குற்றச்சாட்டு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு வரும் 25-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை ஓய்வடைய உள்ளது.

இந்நிலையில் ராஜஸ்தானின் பாலி மாவட்டம், ஜைதரன் என்ற இடத்தில் பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:

இந்திய கலாச்சாரத்தின் மரியாதையை நிலைநாட்ட பாஜக அச்சமின்றி உழைத்து வரும் வேளையில் காங்கிரஸ் கட்சி எப்போதும் ஒரு தரப்பினரை (சிறுபான்மையினரை) திருப்திபடுத்தும் அரசியலைத்தான் செய்துவருகிறது.

ராஜஸ்தானில் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான வினாத்தாள் கசிந்துள்ளது. ஊழலில் அனைத்து சாதனைகளையும் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு முறியடித்துள்ளது. ராஜஸ்தானின் 40 லட்சம் இளைஞர்களை மோசடி செய்துள்ளது. இவ்வாறு அமித் ஷா கூறினார்.

முன்னதாக சிகார் மாவட்டம், நவல்கார் என்ற இடத்தில் அமித் ஷா பேசியதாவது: திருப்திபடுத்தும் அரசியல், போட்டித் தேர்வு வினாத்தாள் கசிவுகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றுக்கு உத்தரவாதம் தரும் அரசாக இங்குள்ள காங்கிரஸ் அரசு உள்ளது.

ராஜஸ்தானில் கடந்த 5 ஆண்டுகளில் 40-க்கும் மேற்பட்ட கலவரங்கள் நிகழ்ந்துள்ளன. மாநிலத்தை நிர்வகிக்க காங்கிரஸுக்கு தெரியவில்லை. பிரதமர் மோடி சார்பில்உங்களுக்கு உத்தரவாதம் தருகிறேன். ராஜஸ்தானில் பாஜக ஆட்சிக்கு வந்தால் கலவரம் இல்லாத மாநிலமாக அது திகழும்.

இந்த தேர்தல் நமது வேட்பாளர்களின் தலையெழுத்தை மட்டும் தீர்மானிக்கப் போவதில்லை. ராஜஸ்தான் மற்றும் இந்தியாவின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும்.

2024-ம் ஆண்டு பிரதமராக மீண்டும் மோடி தேர்வு செய்யப்படுவதை உங்கள் வாக்கு உறுதி செய்யும். மேலும் ஊழல்கள் மிகுந்த கெலாட் அரசை ஆட்சியிலிருந்து அகற்ற உங்கள் வாக்கு உதவும்.

அயோத்தியில் ராமர் கோயிலுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அங்கு பிரம்மாண்ட ராமர் கோயில் வரும் ஜனவரி 22-ம் தேதி திறக்கப்பட உள்ளது.

தேர்தல் நாளில் தாமரை சின்னத்துக்கு வாக்களியுங்கள். உங்களை இலவசமாக அயோத்தி ராமர் கோயிலுக்கு அழைத்துச் செல்வதற்கான உத்தரவாதத்தை நான் தருகிறேன். இவ்வாறு அமித்ஷா பேசினார். ராஜஸ்தான் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3-ம் தேதி எண்ணப்பட உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x