Published : 22 Nov 2023 06:09 PM
Last Updated : 22 Nov 2023 06:09 PM
புதுடெல்லி: "காங்கிரஸும், காந்தி குடும்பமும் இந்திய அரசியலின் ராகு மற்றும் கேது போன்றவர்கள். டிசம்பர் 3ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையின்போது, பாஜகவின் வெற்றி உறுதியாகும். பாஜக அரசு பொறுப்பேற்றவுடன் ராஜஸ்தானை புதிய சகாப்தத்திற்கு கொண்டு செல்லும்” என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.
நவம்பர் 25ஆம் தேதி ராஜஸ்தானில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் பரபரப்பாக உள்ளது. இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம், பாலியில் நடந்த பேரணியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “இந்திய அரசியலில் காங்கிரஸும், காந்தி குடும்பமும் ராகு மற்றும் கேது போன்றவர்கள். இந்தியாவின் எதிர்காலத்தில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், அது காந்தி குடும்பம் மற்றும் காங்கிரஸால் மட்டுமே நடந்ததாக அர்த்தம். டிசம்பர் 3ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையின்போது பாஜக வெற்றி பெறும் செய்தி உறுதியாகும். பாஜக அரசு பொறுப்பேற்றவுடன் ராஜஸ்தானை புதிய சகாப்தத்திற்கு கொண்டு செல்லும்.
சந்திரயான் மூலம் நிலவுக்கு நமது தேசிய கொடியை சென்றடையச் செய்தவர் பிரதமர் மோடி. புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை அவர் கட்டினார். 11-வது இடத்தில் இருந்த பொருளாதாரத்தை 5வது இடத்திற்கு உயர்த்தி காட்டியிருக்கிறார். விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்கில் தற்போது மத்திய அரசு சார்பில் ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. ராஜஸ்தானில் பாஜக அரசு அமைந்த பிறகு, மாநில அரசு சார்பில் ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு, மொத்தம் ரூ.12 ஆயிரம் வழங்கப்படும். பாஜக ஆட்சி அமைந்தால் கேஸ் சிலிண்டரை ரூ.450-க்கு வழங்குவோம். பிரதமர் மோடி பல வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றி காட்டியுள்ளார்” என்றார்.
முன்னதாக, நசிராபாத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேசுகையில், "ராகுல் காந்தி தொடர்ந்து ஓபிசி சமூகத்தைப் பற்றி பேசுகிறார். ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி உட்பட காந்தி குடும்பத்தின் நான்கு தலைமுறைகளும், இப்போது ராகுல் காந்தியும் ஓபிசியின் வளர்ச்சிக்கு எதிராகவே இருந்துள்ளனர்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT