Published : 22 Nov 2023 03:30 PM
Last Updated : 22 Nov 2023 03:30 PM
புதுடெல்லி: சாம் ஆல்ட்மேன் மீண்டும் ஓப்பன் ஏஐ நிறுவனத்தில் சிஇஓவாக இணைய உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை சாம் ஆல்ட்மேனும் உறுதிப்படுத்தியுள்ளார்.
சாட்ஜிபிடி செயலியை உருவாக்கிய ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓ-வாக பதவி வகித்து வந்தவர் சாம் ஆல்ட்மேன். இவர் நிறுவனத்துடன் வெளிப்படைத்தன்மையுடனும் சரியான முறையிலும் தொடர்பில் இல்லை என்று குற்றம்சாட்டி கடந்த வெள்ளிக்கிழமை, ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் இயக்குநர் குழு, சாம் ஆல்ட்மேனை நிறுவனத்திலிருந்து நீக்கியது. சாம் ஆல்ட்மேனின் நீக்கம் சர்வதேச அளவில் தொழில் நுட்பத்துறையினர் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதோடு சாம் ஆல்ட்மேனின் நீக்கத்தைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் தலைவர் கிரேக் ப்ரோக்மேன் உட்பட முக்கிய அதிகாரிகள், ஊழியர்கள் ராஜினாமா செய்தனர். ஓப்பன் ஏஐ நிறுனத்தின் முதலீட்டாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் சாம் ஆல்ட்மேனை மீண்டும் சிஇஓ-வாக நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.
அதே நேரத்தில், சாம் ஆல்ட்மேன் மற்றும் அதன்முன்னாள் தலைவர் கிரெக் ப்ரோக்மேன் ஆகியோர் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் இணைந்து செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஆராய்ச்சிக்கான புதிய குழுவை வழிநடத்துவார்கள் என மைக்ரோசாஃப்ட் நிறுவன சிஇஓ சத்யா நாதெள்ளா தெரிவித்திருந்தது கவனிக்கத்தக்கது.
இந்நிலையில் 5 நாட்களாக நீடித்து வந்த பிரச்சினைக்கு ஓப்பன்ஏஐ (OpenAI) முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஓப்பன்ஏஐ நிறுவனம் வெளியிட்டுள்ள குறிப்பில், “சாம் ஆல்ட்மேன் ஓப்பன்ஏஐ நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக இணைய கொள்கை ரீதியாக ஒரு உடன்பாட்டை நாங்கள் எட்டியுள்ளோம். இது தொடர்பான தகவல்களைத் சேகரிக்க விருக்கிறோம். அத்துடன் இதுவரை பொறுமை காத்தமைக்கு நன்றி ” எனத் தெரிவித்துள்ளது. இந்தக் குழுவில் பிரெட் டெய்லர், லேரி சம்மர்ஸ் மற்றும் ஆடம் டி ஏஞ்சலோ ஆகியோர் அடங்குவர்.
சாம் ஆல்ட்மேன் இது குறித்து தன்னுடைய எக்ஸ் தளத்தில், “நான் ஓப்பன்ஏஐ-யை நேசிக்கிறேன். கடந்த சில தினங்களாக இலக்கை நோக்கி எனது குழுவை இணைப்பதிலேயே நேரம் செலவிட்டுக் கொண்டிருந்தேன். புதிய நிர்வாகக் குழுவோடும், (சத்யா நாதெள்ளா) ஆதரவோடும் ஓப்பன்ஏஐ-க்குத் திரும்புவதில் ஆர்வமாக இருக்கிறேன். அதோடு மைக்ரோசாப்ட் உடன் வலுவான கூட்டணியை உருவாக்க விரும்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். நேற்று, ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தலைமை பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட சாம் ஆல்ட்மேனை மீண்டும் ஓப்பன்ஏஐ-க்கு கொண்டுவராவிட்டால் அந்நிறுவனத்தில் இருந்து விலகுவதாக எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT