Published : 22 Nov 2023 03:04 PM
Last Updated : 22 Nov 2023 03:04 PM
புதுடெல்லி: காணொளி காட்சி ஜி20 உச்சிமாநாடு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற உள்ளது. இதில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.
கடந்த செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் புதுடெல்லியில் ஜி20 உச்சிமாநாடு நடைபெற்றது. இதில், ஜி20 அமைப்பின் உறுப்பு நாடுகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்றனர். அப்போது, ஜி20 மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் நிலை குறித்து மீண்டும் ஆய்வு செய்ய காணொளி காட்சி வாயிலாக ஜி20 உச்சி மாநாடு நடத்தப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி, காணொளி காட்சி உச்சிமாநாடு இன்று நடைபெறுகிறது.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே மோதல் ஏற்பட்டு வரும் சூழலில் நடைபெறும் இந்த மாநாட்டிற்கு பிரதமர் மோடி தலைமை வகிக்கிறார். கடந்த செப்டம்பரில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் பங்கேற்காத ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின், இந்த மாநாட்டில் பங்கேற்கிறார். இதேபோல், கடந்த ஜி20 உச்சிமாநாட்டிற்குப் பிறகு இந்தியா - கனடா இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இதையடுத்து, பிரதமர் மோடியும், கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோவும் சந்திக்கும் முதல் மாநாடாக இந்த மாநாடு விளங்க உள்ளது. சீன பிரதமர் லி கியாங் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார் என அந்நாடு நேற்று உறுதி அளித்துள்ளது.
இந்த உச்சிமாநாடு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இந்தியாவின் G20 ஷெர்பா அமிதாப் காந்த், "காணொளி காட்சி வாயிலாக ஜி20 உச்சிமாநாடு நடத்துவது அரிதானது; விதிவிலக்கானது. ஜி20 உச்சிமாநாட்டின் தலைமை டிசம்பரில் பிரேசிலுக்குச் செல்கிறது. அதற்கு முன் இந்தியாவின் G20 தலைமையின் கீழ் உலகத் தலைவர்கள் பங்கேற்கும் இரண்டாவது உச்சிமாநாடாக இது இருக்கும். ஜி 20 தலைவர்களில் பெரும்பாலோர் கலந்துகொள்வார்கள்; சிறந்த பங்கேற்பை அளிப்பார்கள். உலகத் தலைவர்களுடன் பிரதமர் மோடி உரையாடுவதற்கான வாய்ப்பை இது வழங்கும்.
செப்டம்பர் G20 உச்சிமாநாட்டிற்குப் பிறகு பல சவால்கள் தோன்றியுள்ளன. இந்த உச்சிமாநாட்டின் முதன்மை நோக்கமாக வளர்ச்சி இருக்கும். அதோடு, தலைவர்கள் எண்ணற்ற பிற பிரச்சினைகள் குறித்து விவாதங்களில் ஈடுபடலாம். புவி-அரசியல் பதட்டங்கள் குறித்த பிரச்சினைகள் கூட்டத்தில் எழுப்பப்பட்டால், அதற்கு இந்தியா எவ்வாறு பதில் அளிக்கும் என்பதை முன்கூட்டியே கூறுவது சரியாக இருக்காது. இந்த உச்சி மாநாடு தலைவர்களின் அறிவிப்பை செயல்படுத்துவது பற்றி விவாதிக்க மட்டுமல்லாமல், தலைவர்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும், முக்கியமான சவால்களில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும்தான்.
உலகளாவிய நிர்வாகத்தில் உள்ள இடைவெளிகளை நிவர்த்தி செய்வது, நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கான (SDGs) அர்ப்பணிப்புடன் மீண்டும் உறுதிப்படுத்துவது ஆகியவை இந்த மாநாட்டின் நோக்கமாக இருக்கும். டிசம்பர் 1 முதல் ஜி20 தலைவர் பதவி பிரேசிலிடம் ஒப்படைக்கப்படும். கூட்டத்தில் பல பிரச்சினைகள் பற்றி விவாதிக்கப்படும். காசா நிலைமை தொடர்பான விவாதங்கள் மீது அனைவரது பார்வையும் உள்ளது" என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT