Published : 22 Nov 2023 01:39 PM
Last Updated : 22 Nov 2023 01:39 PM

ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல் | “156 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறும்” - அசோக் கெலாட்

அசோக் கெலாட் | ராஜஸ்தான் முதல்வர்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 156 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு வரும் 25-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 200 தொகுதிகளில், ஒரு தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் மறைந்ததை அடுத்து 199 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. நாளை மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வர உள்ளதால், அம்மாநிலத்தில் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில், ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதல்வர் அசோக் கெலாட், "வழக்கமாக ராஜஸ்தானில் நடைபெறும் ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலின்போதும் ஆட்சி மாறுவது வழக்கம். ஆனால், இம்முறை அவ்வாறு ஆட்சி மாற்றம் ஏற்படாது. ஏனெனில், காங்கிரஸ் அரசு தொடர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். கடந்த 5 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளது. இதன் பலன்கள் மக்களைப் போய்ச் சேர்ந்துள்ளன. எனவேதான், இந்த அரசு தொடர வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். இந்த தேர்தலில், 156 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியைத் தொடரும்.

தேர்தல் முடிந்த பிறகு முதல்வராக தொடர்வீர்களா என்று கேட்கிறீர்கள். தேர்தலுக்குப் பிறகு கட்சி மேலிடம் என்ன சொல்கிறதோ அதுதான் எனது பணி. எனது எதிர்காலப் பணியை நான் திட்டமிடுவது கிடையாது. கட்சி மேலிடம் சொல்வதைச் செய்வேன்.

பொருளாதார குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தண்டிக்கப்பட வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவை அவசியம். வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும் சட்டப்படியான தங்கள் கடமைகளைச் செய்தால்தான் பொருளாதாரக் குற்றங்கள் நிகழாமல் தடுக்க முடியும். ஆனால், கடந்த 9 ஆண்டுகளாக அவர்களின் நோக்கம் திசை திருப்பப்பட்டிருக்கிறது. அரசுகளை கவிழ்க்கவும், எம்எல்ஏக்களை அச்சுறுத்தவும், விலைக்கு வாங்கவும் இந்த விசாரணை அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும் கொடுத்த அழுத்தம் காரணமாகவே, மத்தியப் பிரதேசத்திலும், மகாராஷ்டிராவிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆனால், மக்கள் இதனை விரும்பவில்லை.

பிரதமர் நேற்று நடத்திய ரோட் ஷோ தோல்வியில் முடிந்தது. வெறும் 9 கிலோ மீட்டர் அளவுக்குத்தான் அந்த ரோட் ஷோ நடைபெற்றது. பாஜக தேர்தல் பதற்றத்தில் இருக்கிறது. ரோட் ஷோவை நடத்துவதற்காக அவர்கள் வெளி மாவட்டங்களில் இருந்தெல்லாம் ஆட்களைக் கொண்டு வந்தார்கள். அதுமட்டுமல்ல, பாஜக உள்ளூர் பிரச்சினைகள் குறித்து பேசவே இல்லை" என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x