Published : 21 Nov 2023 02:55 PM
Last Updated : 21 Nov 2023 02:55 PM

“பாஜக பாலியல் வன்கொடுமை செய்தவர்களை ஆதரிக்கிறது; பிரிஜ் பூஷன் சிங்கை மறக்க முடியுமா?” - காங்கிரஸ் மூத்த தலைவர் கேள்வி

மூத்த தலைவர் கவுரவ் வல்லப்

உதய்பூர்: "காங்கிரஸ் பாலியல் வன்கொடுமை செய்பவர்களை ஒருபோதும் ஆதரித்ததில்லை. ஆனால் பாஜக பாலியல் வன்கொடுமை செய்பவர்களை ஆதரிக்கிறது" எனக் காங்கிரஸ் மூத்த தலைவர் கவுரவ் வல்லப் பிரதமர் மோடியின் கருத்துக்கு எதிர்வினையாற்றியுள்ளார்.

ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்த கருத்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் மூத்த தலைவர் கௌரவ் வல்லப் (Gourav Vallabh ) பேசியுள்ளார். ராஜஸ்தானின் பாலியில் நேற்று நடந்த பேரணியில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் கவுரவ் வல்லப் பேசியதாவது," மற்ற மாநிலங்களைவிட ராஜஸ்தானில் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அதற்குக் காரணம் என்னவென்றால், ராஜஸ்தானில் புகார் கொடுக்க வருபவர்களின் அனைத்து புகார்களையும் பதிவுசெய்யவேண்டும் என்று காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் மற்ற மாநிலங்களில், பெரிய குற்றங்கள் நடந்தால் கூட, எஃப்ஐஆர் எதுவும் பதிவு செய்யப்படுவதில்லை.

காங்கிரஸ் பாலியல் வன்கொடுமை செய்பவர்களை ஒருபோதும் ஆதரித்ததில்லை. ஆனால் பாஜக பாலியல் வன்கொடுமை செய்பவர்களை ஆதரிக்கிறது. பிரிஜ் பூஷன் வழக்கில் பாஜக எப்படி நடந்துகொண்டது என்பதை யாரும் மறக்க முடியாது. இந்தியாவுக்காக ஒலிம்பிக் பதக்கம் வென்று கொடுத்த மல்யுத்த வீராங்கனைகள், பாஜகவைச் சேர்ந்த எம்.பி. பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் புகார் கொடுத்தனர். ஆனால் மோடி மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக நிற்கவில்லை. குற்றம்சாட்டப்பட்ட பிரிஜ் பூஷன் சிங்கை பாதுகாப்பதில் மட்டுமே அக்கறை செலுத்தினார். பிரதமர் மோடி ஏன் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக நிற்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக பேசிய மோடி, "ராஜஸ்தான் பெண்களின் மன உறுதியைக் காங்கிரஸ் கட்சி சிதைத்துவிட்டது. பெண்கள் போலியாக பாலியல் வன்கொடுமை புகார் அளிப்பதாக முதல்வர் கூறியுள்ளார். அவரால், பெண்களைப் பாதுகாக்க முடியாதா? அப்படி பாதுகாக்க முடியாத முதல்வர் ஒரு நிமிடம் கூட பதவியில் இருக்கலாமா?" என்று கேள்வி எழுப்பினார். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 200 தொகுதிகளுக்கு வரும் 25-ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3-ம் தேதி எண்ணப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x