Published : 21 Nov 2023 02:00 PM
Last Updated : 21 Nov 2023 02:00 PM

“காங்கிரசை பழிப்பதையே வேலையாகக் கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி” - மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு

ஜெய்ப்பூர்: காங்கிரஸ் கட்சியை பழிப்பதையே பிரதமர் மோடி வேலையாகக் கொண்டிருப்பதாக மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு வரும் 25-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 200 தொகுதிகளில் ஒரு தொகுதியின் வேட்பாளர் உயிரிழந்ததை அடுத்து 199 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பிரச்சாரம் நாளை மறுநாளுடன் முடிவுக்கு வருவதால், அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றன. ராஜஸ்தானின் பிரதான எதிர்க்கட்சியான பாஜக சமீபத்தில் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இந்நிலையில், ஆளும் காங்கிரஸ் கட்சி இன்று (செவ்வாய்க் கிழமை) தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடும் விழா தலைநகர் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: "காங்கிரஸ் கட்சியை பழிப்பதைத் தவிர வேறு எந்த வேலையையும் பிரதமர் மோடி செய்வதில்லை. என்னை, ராகுல் காந்தியை, சமீபத்தில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டை பிரதமர் மோடி தொடர்ந்து பழிக்கிறார். நான் அவரது தந்தையை மரியாதைக்குறைவாகப் பேசிவிட்டதாக மோடி கூறுகிறார். நான் ஏன் அவரை மரியாதைக் குறைவாகப் பேசப் போகிறேன். அவர் எப்போதே இறந்துவிட்டவர். இறந்தவர்களை அவமதிக்கும் பழக்கம் எங்களுக்குக் கிடையாது. ஆனால், அந்த பழக்கம் மோடிக்கு இருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலம் காங்கிரஸ் வலுவாக உள்ள மாநிலம். ராஜஸ்தானில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிடுவது இது முதல்முறை அல்ல. 1926 முதலே காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகிறது. அப்போது முதலே, எத்தகைய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமோ அதைத்தான் நாங்கள் கூறுவோம். கடந்த 2018-ல் காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகளில் 90 சதவீதத்துக்கு அதிகமாக அசோக் கெலாட் நிறைவேற்றிவிட்டார்.

ராஜஸ்தானில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும்போது இங்கே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். ராஜஸ்தானில் மட்டுமல்ல, நாடு முழுமைக்குமே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். ஏழைகளுக்கு உதவ வேண்டும் எனும் நோக்கத்திலேயே சாதிவாரி கணக்கெடுப்பை நாங்கள் ஆதரிக்கிறோம். பிரதமர் மோடி தன்னை பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என கூறிக்கொள்கிறார். பிரதமர் மோடி 'காஞ்சி-தேலி' (Ghanchi-Teli) சாதியைச் சேர்ந்தவர். அந்த சாதி பிற்படுத்தப்பட்ட சாதி அல்ல. குஜராத் முதல்வராக நரேந்திர மோடி வந்த பிறகு அந்த சாதியை அவர் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் பட்டியலில் கொண்டு வந்தார்." இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே பேசினார்.

நிகழ்ச்சியில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட், சி.பி. ஜோஷி, ஜெய்ராம் ரமேஷ், பவார் ஜிதேந்திர சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கடந்த 2018ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 99 தொகுதிகளிலும், பாஜக 73 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பகுஜன் சமாஜ் மற்றும் சுயேட்சைகளின் ஆதரவுடன் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் அரசு அமைந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x