Published : 21 Nov 2023 06:00 AM
Last Updated : 21 Nov 2023 06:00 AM

மணிப்பூரில் பறந்த பறக்கும் தட்டு: தேடுதல் வேட்டையில் ரஃபேல் விமானங்கள்

புதுடெல்லி: மணிப்பூர் மாநிலம் இம்பால் விமானநிலையம் அருகே பறக்கும் தட்டு (யுஎஃப்ஓ) பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த பறக்கும் தட்டை தேடும் பணியில் இந்திய விமானப் படை விமானங்கள் ஈடுபட்டுள்ளன.

வழக்கமாக வானத்தில் பறக்கும்தட்டுகள் அல்லது அடையாளம் தெரியாத மர்மப் பொருட்கள் அவ்வப்போது வானில் தெரிவதாகத் தகவல் வெளியாகும். இது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும். இவை பறக்கும் தட்டுகள், வேற்று கிரகங்களில் இருந்து வரும் வேற்று கிரக வாசிகளின் விமானங்கள் என்ற தகவல்களும் வெளியாகும். ஆனால், இவை பெரும்பாலும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில்தான் நடைபெறும்.

இந்நிலையில் இதேபோன்ற தொரு சம்பவம் மணிப்பூர் மாநிலம் இம்பாலில் நடைபெற்றுள்ளது. இம்பால் நகரிலுள்ள விமான நிலையப் பகுதியில் பறக்கும் தட்டு நேற்று முன்தினம் பறந்ததாகத் தகவல் வெளியானது.

நேற்று முன்தினம் பிற்பகல் 2.30 மணியளவில், இம்பால் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு (ஏடிசி) மத்திய தொழில்பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டு அறையிலிருந்து ஒரு அவசர அழைப்பு வந்துள்ளது. அங்குள்ள விமான கட்டுப்பாட்டு அறைக்கு மேலே பறக்கும் தட்டு பறப்பதாகப் பாதுகாப்புப் படையினர் அப்போது தெரிவித்தனர்.

ஏடிசி கட்டிடத்தின் மாடியில் இருந்து பார்த்தால் அந்த பறக்கும் தட்டு தெரிந்தது. விமான நிறுவன ஊழியர்கள் பாதுகாப்புப் படையினர், பொதுமக்கள் எனப் பலரும் இதைப் பார்த்துள்ளனர், மேலும், அந்த பறக்கும் தட்டு வெள்ளை நிறத்தில் இருந்தது.

அது கட்டிடத்தின் மேல் பறந்து ஏடிசி கோபுரத்துக்கு மேலே தெற்கு நோக்கி நகர்ந்து சிறிது நேரம் அங்கேயே நின்றது. பின்னர் அது ஓடுபாதையின் தென்மேற்கு நோக்கி நகர்ந்துள்ளது.

விமான சேவை பாதிப்பு: இந்தச் சம்பவத்தால் இம்பால் விமான நிலையத்தில் விமானச் சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மேலும் இம்பால் விமான நிலைய வான்பரப்பு மூடப்பட்டது. விமானங்கள் தரையிறங்கவும், மேலே பறக்கவும் அனுமதி மறுக்கப்பட்டது.

இதையடுத்து அந்த பறக்கும் தட்டை தேடும் பணியில் இந்திய விமானப் படையைச் சேர்ந்த 2 ரஃபேல் போர் விமானங்கள் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் இதுகுறித்து விமானப் படை மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “குறைந்த அளவு உயரத்தில் பறக்கும் பொருளைக் கூட கண்டறியும் திறனை ரஃபேல் போர் விமானங்கள் பெற்றுள்ளன. அந்த விமானத்தில் உள்ள மிகவும் சக்திவாய்ந்த சென்சார்கள் அதைக்கண்டறிந்துவிடும். விமான நிலையத்தில் பறந்த பறக்கும் தட்டை கண்டறியும் பணியில் ரஃபேல் விமானங்கள் ஈடுபட்டன.

தற்போது வரை அந்த பறக்கும் தட்டு எங்கு சென்றது என்பதைக் கண்டறிய முடியவில்லை. தேடுதல் வேட்டையை முடித்துவிட்டு ஒரு ரஃபேல் விமானம் திரும்பிவிட்டது. மற்றொரு விமானம் தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது” என்றார்.

அந்த பறக்கும் தட்டு அதன் பின்னர் விமானநிலையப் பகுதிகளில் தென்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து இம்பால் விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்கவும், பறந்து செல்ல வும் அனுமதிக்கப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x