Published : 21 Nov 2023 07:23 AM
Last Updated : 21 Nov 2023 07:23 AM
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பாஜக ஆட்சி அமைந்தால் பெட்ரோல், டீசல் விலையை மறுஆய்வு செய்வோம் என்று பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்துள்ளார். ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கு வரும் 25-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. ராஜஸ்தானை ஆளும் காங்கிரஸ் அரசுக்கு நேரடி போட்டியாக பாஜக தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
இதையடுத்து பாஜக முக்கிய தலைவர்கள் பல்வேறு தொகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையொட்டி, பாலி பகுதியில் பாஜக சார்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் கொண்டுவரப்பட்டதில் இருந்து, காங்கிரஸ்,அதன் கூட்டணி கட்சிகள் பெண்களுக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
அக்கூட்டணி கட்சித் தலைவர்கள் நமது தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு எதிராக கண்டிக்கத்தக்க கருத்துகளைக் கூறி வருகின்றனர். பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் சட்டப்பேரவையில் பெண்களுக்கு எதிராக அநாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார். ஆனால், இதுகுறித்து எந்த காங்கிரஸ் தலைவரும் எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. ராஜஸ்தான் மக்கள் அங்கீகரித்த காங்கிரஸின் உண்மை முகம் இதுதான். அதேபோல், தலித்துகளுக்கு எதிராக அட்டூழியங்கள் நடப்பதைப் பார்க்கும் போதெல்லாம் காங்கிரஸ் தன்னுடைய கண்களை மூடிக்கொள்ளும்.மொத்த நாடே வளர்ச்சியை நோக்கி இரவு பகலாக வேலை செய்து கொண்டிருக்கிறது. 21-ம் நூற்றாண்டில் நாடு வளர்ச்சியை எட்டும்போது ராஜஸ்தான் அதில் முக்கியப் பங்கு வகிக்கும். அதற்கு ராஜஸ்தானுக்கு, மாநிலத்தின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசு தேவை.
இங்கு பாஜக ஆட்சி ஏற் பட்டதும் பெட்ரோல், டீசல் விலைமறுஆய்வு செய்யப்படும். பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். ராஜஸ்தான் மாநிலத்தைச் சுற்றியுள்ள மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை குறைவாக இருக்கும்போது இங்கு மட்டும் அதிகமான விலைக்கு விற்கப்பட்டு வருகிறது. அதைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
காங்கிரஸ் கட்சி எப்போதும் வளர்ச்சிக்கு எதிரானதாகவே இருக்கும். காங்கிரஸுக்கும் நல்ல நோக்கத்துக்கும் இடையிலான உறவு என்பது வெளிச்சத்துக்கும் இருட்டுக்கும் இடையிலான உறவு போன்றது. மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சி இருக்க வேண்டும். இரட்டை இன்ஜின் ஆட்சி இருந்தால் வளர்ச்சியும் இரட்டிப்பாக இருக் கும். எனவே, ராஜஸ்தானில் பாஜக ஆட்சி மலர, பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...