Published : 30 Jul 2014 09:00 AM
Last Updated : 30 Jul 2014 09:00 AM
‘இரு தரப்பும் சமரசம் செய்து கொண்டாலும் பாலியல் வன்கொடுமை, கொலை உள்ளிட்ட கடும் குற்ற வழக்குகளை ரத்துசெய்ய முடியாது’ என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்ற பின் இருதரப்பிலும் சமரசம் செய்து கொண்டு தங்கள் வழக்குகளை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்கள் நீதிபதிகள் ரஞ்சனா பிரகாஷ் தேசாய், என்.வி.ரமணா அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் அளித்த தீர்ப்பு விவரம்:
பாலியல் வன்கொடுமை, கொலை போன்ற கடும் குற்றங்கள் புரிந்தவர்கள் பாதிக்கப்பட்டவர்களுடன் சமரசம் செய்து கொண்டாலும் அந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய முடியாது. அப்படி செய்வது சமூகத்தின் மீது மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
அத்தகைய வழக்குகளை ரத்து செய்தால் சமூகத்தில் அமைதி, நல்லிணக்கம் ஏற்படும் என்று உயர் நீதிமன்றம் கருதினால், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அத்தகைய வழக்குகளை ரத்து செய்யலாம். இதில் அந்தந்த வழக்கின் தன்மை, சூழ்நிலைகளைப் பொறுத்து உயர் நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டும். அதுபோன்ற வழக்குகளை அரசு தரப்பு தொடர்வதில் அர்த்தமில்லை. அதை தொடருவது நேரத்தை வீணடிப்பதற்குச் சமம்.
ஆனால் கொலை, பாலியல் வன்கொடுமை போன்ற கடும் குற்றங்களைப் பொறுத்தமட்டில் அவற்றை இரண்டு தனிநபர்கள் அல்லது ஒரு குழுவினர் மட்டும் தொடர்புடைய விஷயமாக கருத முடியாது. அவர்களுக்குள் சமரசம் செய்து கொண்டாலும் அந்த வழக்கை ரத்து செய்வது சமூகத்துக்கு தவறான வழிகாட்டுதலை ஏற்படுத்திவிடும். எனவே அதுபோன்ற வழக்குகளை தள்ளுபடி செய்ய முடியாது. இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT