Published : 19 Nov 2023 04:18 PM
Last Updated : 19 Nov 2023 04:18 PM
டேராடூன்: உத்தராகண்டின் சில்க்யாரா சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்கள் மீட்கும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை 8-வது நாளை எட்டியுள்ளது. இதனிடையே நான்கு வெவ்வேறு வழிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்ள பிரதமர் அலுவலகம் முடிவு செய்துள்ளது.
உத்தராகண்டில் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக உத்தரகாசி, யமுனோத்ரியை இணைக்கும் வகையில் சில்க்யாரா வளைவு - பர்காட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் கடந்த 12-ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் 60 மீட்டர் தொலைவு சுரங்கப் பாதையில் மண் சரிந்தது. இருபுறமும் மணல் மூடிய நிலையில் சுரங்கப் பாதைக்குள் 40 தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர். சுமார் ஒரு வார காலமாக சுரங்கத்துக்குள் தொழிலாளர்கள் சிக்கியுள்ளதால் அவர்களின் உடல் மற்றும் மனநிலை குறித்த அச்சம் அதிகரித்துள்ளது.
இதனிடையே, உத்தராகண்ட் சென்ற மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி மீட்பு பணி நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். அதுகுறித்து நிதின் கட்கரி கூறுகையில், "ஆர்ஜர் இயந்திரம் சரியாக செயல்பட்டால் சுரங்கத்துக்குள் சிக்கியிருக்கும் தொழிலாளர்கள் இன்னும் 2-3 நாட்களில் மீட்கப்படுவார்கள். உள்ளே இருக்கும் தொழிலாளர்கள் உயிருடனும், ஆரோக்கியத்துடனும் இருப்பதை உறுதி செய்வதில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
சிறப்பு இயந்திரங்களைக் கொண்டு வருவதற்காக பிஆர்ஓ (Border Roads Organization) மூலமாக புதிய சாலைகள் போடப்படுகின்றன. பல்வேறு இயந்திரங்கள் இங்கு வந்துள்ளன. தற்போது இரண்டு ஆர்ஜர் இயந்திரங்கள் துளையிடும் பணிகளைச் செய்து வருகின்றது" என்று தெரிவித்தார்.
முன்னதாக, பிரதமர் அலுவலக முன்னாள் ஆலோசகர் பாஸ்கர் குல்பே, "இங்கு வேலை செய்யும் பல்வேறு நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் உள்ளே சிக்கியிருக்கும் தொழிலாளர்கள் இன்னும் நான்கு ஐந்து நாட்களில் மீட்கப்படலாம். கடவுளின் கருணை இருந்தால் அது இன்னும் சீக்கிரமாக முடியும்" என்று தெரிவித்திருந்தார்.
இதனிடையே உள்ளே இருக்கும் தொழிலாளர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் அவசர வெளியேற்ற வழி அமைக்கப்பட்டு வருகிறது. சுரங்கத்தின் வாசலில் பாதுகாப்பு பகுதிகளை ஏற்படுத்துவதும் இதில் அடங்கும். சில்க்யாரா சுரங்கப்பாதைக்கான புதிய பாதையை ஞாயிற்றுக்கிழமைக்குள் பிஆர்ஓ அமைத்து முடிக்கும் என்று மீட்பு குழு அதிகாரிகள் நம்புகின்றனர். இது சிக்கி இருக்கும் தொழிலாளர்களை மீட்க வேறு வழியை வழங்கும், மேலும் வெள்ளிக்கிழமை நிறுத்தப்பட்ட பணிகளை மீண்டும் தொடங்க வழி செய்யும்.
சர்வதேச சுரங்க நிபுணரான பேராசிரியர் அர்னோல்ட் டிக்ஸ் சுரங்கத்துக்குள் சிக்கியிருக்கும் தொழிலாளர்களை மீட்கும் பணிகளில் உதவுவதற்காக இந்தியா வருவதாக வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
இந்தநிலையில் சுரங்கத்துக்குள் சிக்கியிருக்கும் 41 தொழிலாளர்களை மீட்பதற்கு ஒரே வழிமுறையில் மட்டும் செயல்படுவதற்கு பதிலாக நான்கு வெவ்வேறு வழிமுறைகளில் செயல்படலாம் என்று பிரதமர் அலுவலக அதிகாரிகளும், களத்தில் உள்ள மீட்புக்குழுவினரும் முடிவு செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT