Published : 27 Jan 2018 09:25 AM
Last Updated : 27 Jan 2018 09:25 AM
திருப்பதியில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் நேற்று 69-வது குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் ஐஏஎஸ் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் பேசியதாவது:
ஆகம சாஸ்திர வல்லுநர்களின் அறிவுரைகளின்படியே மூலவருக்கும், உற்சவ மூர்த்திகளுக்கும் தேவஸ்தான கோயில்களில் பூஜைகள் நடத்தப்படுகின்றன. சாமானிய பக்தர்களுக்கே எப்போதும் முன்னுரிமை அளிக்கப்படும். ஏழுமலையானின் கோயிலுக்குள் சீதோஷ்ண நிலைகளுக்கேற்ப தற்காலிக கூரை விரைவில் ஏற்பாடு செய்யப்படும்.
கோயிலில் பாதுகாப்பு கருதி விரைவில் அதிக திறன் கொண்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். நேரத்தின் அடிப்படையில், ‘டைம் ஸ்லாட்’ தரிசனத்திற்காக திருமலை, திருப்பதியில் தனி மையங்கள் அமைக்கப்படும்.
தினமும் நடைபாதை வழியாக வரும் 20 ஆயிரம் பக்தர்களுக்கு திவ்ய தரிசனம் டோக்கன் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். தற்போது தினமும் தயாரிக்கும் லட்டு பிரசாதத்தை விட இனி கூடுதலாக 50,000 லட்டுகள் தயாரிக்கப்படும்.இதன் மூலம் லட்டு பிரசாத தட்டுப்பாடு நீங்கும். ஆன்லைன் மூலம் தேவஸ்தான திருமண மண்டபங்களை முன்பதிவு செய்து கொள்ளலாம். ஏழுமலையானின் ஆர்ஜித சேவைகளுக்கு குலுக்கல் முறை நீடிக்கும். கன்னியாகுமரி, ரிஷிகேஷ், ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் தேவஸ்தானம் சார்பில் கட்டப்பட்டு வரும் ஏழுமலையான் கோயில், 3 மாதங்களில் நிறைவு செய்யப்படும். இவ்வாறு அனில் குமார் சிங்கால் பேசினார். பின்னர் சிறப்பாக சேவை புரிந்த 136 தேவஸ்தான ஊழியர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு விழா நடைபெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT