Published : 19 Nov 2023 05:48 AM
Last Updated : 19 Nov 2023 05:48 AM
பரத்பூர்: ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநிலத்தில் வரும் 25-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆளும் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையேபோட்டி நிலவுகிறது. இந்நிலையில், ராஜஸ்தானின் பரத்பூரில் நேற்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது.
ராஜஸ்தானில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதுகுறித்து முதல்வர் அசோக் கெலாட்டிடம் கேட்டபோது, பெண்கள் பொய் புகார்களை அளிக்கின்றனர் என்று அவர் விளக்கம் அளித்தார். காங்கிரஸ் தலைமையும் கெலாட்டின் கூற்றை ஏற்றுக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட முதல்வர், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பாரா? வரும் தேர்தலில் பெண்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.
பாஜக ஆட்சி நடத்தும் குஜராத், உத்தர பிரதேசம், ஹரியாணாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.97-க்கு விற்கப்படுகிறது. ராஜஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.109-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதாவது காங்கிரஸ் அரசு ஒரு லிட்டர் பெட்ரோலில் ரூ.12-ஐ மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கிறது. ராஜஸ்தானில் பாஜக ஆட்சி அமைத்தால் காங்கிரஸின் பெட்ரோல் கொள்ளைக்கு முடிவு கட்டப்படும். பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும்.
ராஜஸ்தானில் கடந்த 5 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் வியாபித்து பரவி இருக்கிறது. ராம நவமி, ஹோலி உள்ளிட்ட பண்டிகைகளை அமைதியாக கொண்டாட முடியவில்லை. இந்த பண்டிகைகளின்போது கலவரக்காரர்கள், கற்களை வீசி தாக்குதல் நடத்துகின்றனர். ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் தீவிரவாதிகள், குற்றவாளிகள், கலவரக்காரர்கள் தலைதூக்குகிறார்கள். இதற்கு காங்கிரஸின் வாக்கு வங்கி அரசியலே காரணமாகும்.
ராஜஸ்தானின் பரத்பூர் பகுதியை சேர்ந்த ஹிராலால் அண்மையில் தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டார். அவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர். அவரது நியமனத்துக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பாபா சாகேப் அம்பேத்கரை அந்த கட்சி அவமரியாதை செய்தது அனைவரும் அறிந்தது. பாஜக ஆட்சிக் காலத்தில் அம்பேத்கர் தொடர்புடைய இடங்கள் ஆன்மிக சுற்றுலா தலங்களாக மாற்றப்பட்டு உள்ளன.
கரோனா பெருந்தொற்று காலத்தில் ரேஷனில் இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்பட்டன. இந்த திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தேர்தல் ஆணையத்திடம் புகாரும் அளிக்கப்பட்டிருக்கிறது. ஏழைகளுக்கு இலவசமாக உணவு தானியங்களை அளிப்பது குற்றம் என்றால், அந்த குற்றத்துக்காக சிறைக்கு செல்லவும் தயாராக இருக்கிறேன்.
ராஜஸ்தான் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர குதாவின் சிவப்பு டைரி திறக்கப்பட்டு இருக்கிறது. சட்டவிரோத சுரங்க கும்பல், ராஜஸ்தானில் மறைமுகமாக ஆட்சி நடத்தி வருவது சிவப்பு டைரியில் தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால் சட்டவிரோத சுரங்க கும்பல் மீது அரசு தரப்பில் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நிலவின் தென் பகுதியில் இந்தியா கால் பதித்துள்ளது. அண்மையில் ஜி-20 உச்சி மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டது. பாஜக ஆட்சிக் காலத்தில் சர்வதேச அரங்கில் இந்தியாவின் மதிப்பு பன்மடங்கு உயர்ந்து வருகிறது ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் ராஜஸ்தான் பின்னோக்கி செல்கிறது.
வரும் டிசம்பர் 3-ம் தேதி வாக்கு எண்ணிக்கையின்போது ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சி மலரும்.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT