Published : 19 Nov 2023 04:42 AM
Last Updated : 19 Nov 2023 04:42 AM
புதுடெல்லி: உலக கழிவறை தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் பொது இடங்களில் உள்ள 1.5 லட்சம் கழிவறைகளை சுத்தம் செய்தல் மற்றும் பராமரித்தல் திட்டத்தை மத்திய அரசு தொடங்கி உள்ளது.
உலக கழிவறை தினம் ஆண்டுதோறும் நவம்பர் 19-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. ‘பாதுகாப்பான சுகாதார மாற்றத்தை முடுக்கி விடுதல்’ என்பது உலக கழிவறை தினத்துக்கான இந்த ஆண்டின் கருப்பொருளாக உள்ளது. இதையொட்டி, ‘சுத்தமான கழிவறை சவால்’ என்ற இயக்கத்தை மத்திய நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார்.
இதன் ஒரு பகுதியாக, பேருந்து நிலையங்கள், பெட்ரோல் பங்குகள் உட்பட நாடு முழுவதும் நகர்ப்புற பொது இடங்களில் உள்ள சுமார் 1.5 லட்சம் கழிவறைகளை சுத்தம் செய்தல் மற்றும் பராமரித்தல் பணி அடுத்த 5 வாரங்களுக்கு மேற்கொள்ளப்பட உள்ளது.
நகர்ப்புறங்களில் உள்ள பொது மற்றும் சமுதாய கழிவறைகளின் செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பை மேம்படுத்துவதே இந்த சவாலின் முக்கிய நோக்கம் ஆகும்.
தூய்மை, அணுகல், வடிவமைப்பில் புதுமை மற்றும் செயல்பாட்டை எடுத்துக்காட்டும் மாதிரி பொது கழிவறைகளையும் இந்த சவால் அங்கீகரிக்கும். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் கூட தங்கள் சிறந்த மாதிரி பொது கழிவறைகளை பரிந்துரைக்கலாம் என்று மத்திய நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறும்போது, “பிரதமர் நரேந்திர மோடி அரசு கிராமப்புற மற்றும் நகர்ப்புற சுகாதாரத்தில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. 2014-ம் ஆண்டுக்கு முன்பு (காங்கிரஸ் ஆட்சியில்) கொள்கைகளில்தான் வறுமை இருந்தது, நிதியில் வறுமை இல்லை. மத்தியில் பாஜக அரசு அமைந்த பிறகு நாடு முழுவதும் குறிப்பாக கிராமப்புறங்களில் கழிவறைகளை கட்டும் திட்டத்தை ஒரு இயக்கமாக செயல்படுத்தி வருகிறது” என்றார்.
இந்த சவாலை தொடங்கி வைத்த மத்திய நகர்ப்புற விவகாரங்கள் துறை செயலாளர் மனோஜ் ஜோஷி பேசும்போது, “சுகாதாரம் மற்றும் தூய்மையின் தாக்கத்தை மக்கள் எளிதாகக் காணக்கூடிய மற்றொரு நிலைக்கு மாற வேண்டிய தருணம் இது. அனைவருக்கும் கழிவறை வசதியை உருவாக்குவதில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதற்காக தனியார் துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பு அவசியமாகிறது" என்றார்.
இந்நிகழ்ச்சியில் உலக கழிவறை அமைப்பின் நிறுவனர் இயக்குநர் ஜாக் சிம் சிங்கப்பூரிலிருந்து காணொலி வாயிலாக பங்கேற்றார். அப்போது அவர் பேசும்போது, “சுத்தமான கழிவறைகள் வேண்டும் என அனைவரும் விரும்பினால், கழிவறைகளின் உரிமையாளர்தான் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும். இதற்கு பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்பட வேண்டும்” என்றார்.
2014-ம் ஆண்டு மே மாதம் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக அரசு அமைந்தது. அதே ஆண்டு மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி, தூய்மை இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது. கிராமப்புறங்களில் திறந்தவெளியில் மலம் கழிக்கும் நடைமுறைக்கு முடிவு கட்டுவதுதான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம்.
இதன்மூலம் பல்வேறு நோய்கள் பரவுவதைத் தடுக்க முடியும் என்பது சுகாதாரத் துறை நிபுணர்களின் கருத்து. இதற்காக, கழிவறைகளை கட்டுவதற்கு மத்திய அரசு நிதியுதவி வழங்கி வருகிறது. இதன்படி, நாடு முழுவதும் 11 கோடிக்கும் மேற்பட்ட கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT