Published : 18 Nov 2023 05:08 PM
Last Updated : 18 Nov 2023 05:08 PM
ஜெய்ப்பூர்: காங்கிரஸ் ஆட்சியில் இருந்தால் ஊழலும், கொள்ளையும் நிச்சயம் இருக்குமு் என்றும், பாஜக ஆட்சியில் இருந்தால் வளர்ச்சி ஏற்படும் என்றும் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 25ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. ஜோத்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, “கலாச்சாரத்துக்கு பெயர் பெற்ற மாநிலம் ராஜஸ்தான். ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் கலாச்சாரம் ராஜஸ்தானின் அடையாளமாகிவிட்டது. பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளில் ராஜஸ்தான் முதலிடத்தில் உள்ளது. ஊழல் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ராஜஸ்தான் முதலிடத்தில் இருப்பதை முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு உறுதி செய்துள்ளது.
கிரகணத்தின் பிடியில் தற்போது ராஜஸ்தான் உள்ளது. இந்த கிரகணம் வரும் 25 மற்றும் டிசம்பர் 3ம் தேதியோடு முடிவுக்கு வந்துவிடும். பாலைவன மாநிலமான இங்கு பாஜக ஆட்சி அமைக்கும்போது விவசாயிகள் மற்றும் பெண்களுக்கு நீதி கிடைக்கும். காங்கிரஸ் ஆட்சியில் ஊழலும், கொள்ளையும் இருக்கும். பாஜக ஆட்சிக்கு வந்தால் வளர்ச்சி இருக்கும். நரேந்திர மோடியின் ஆட்சியில் பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி இந்தியா உலகின் 5-வது பெரிய பொருளாதாரமாக உயர்ந்துள்ளது. 9 ஆண்டுகளுக்கு முன்பு பேட்டரிகார்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. தற்போது அனைத்து வகையான கார்களும் இந்தியாவிலேயே உற்பத்தியாகின்றன. தற்பாது உலகின் மூன்றாவது மிகப் பெரிய ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரியாக இந்தியா திகழ்கிறது.
ராஜஸ்தானில் பெண்களின் முன்னேற்றத்துக்காக பல்வேறு வாக்குறுதிகளை பாஜக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. ரூ.450-க்கு கேஸ் சிலிண்டர் வழங்கப்படும். புதிதாக பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு ரூ.2 லட்சம் வைப்பு நிதி வைக்கப்படும். 12ம் வகுப்புக்குப் பிறகு தகுதியுள்ள பெண்களுக்கு ஸ்கூட்டர் வழங்கப்படும். பிரதமரின் வீடு கட்டும் திட்டம், வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டம், மதிய உணவு திட்டம் உள்ளிட்ட திட்டங்களில் ஊழல் புரிந்தவர்களுக்கு எதிராக விசாரணை ஆணையம் அமைக்கப்படும். குற்றம் இழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்” என்று அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT