Published : 18 Nov 2023 04:15 PM
Last Updated : 18 Nov 2023 04:15 PM
ஜெய்ப்பூர்: “ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு, பெண்களின் நம்பிக்கையைச் சிதைத்துவிட்டது" என்று பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூரில் சனிக்கிழமை நடந்த தேர்தல் பிரச்சாரப் பேரணிக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசும்போது, “ராஜஸ்தான் மக்கள் ஒரு மந்திரவாதிக்கு வாக்களிக்க வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டார்கள். தேர்தலுக்கு பின்னர் காங்கிரஸ் முற்றிலுமாக வெளியேற்றப்படும். டிசம்பர் 3-ம் தேதி காங்கிரஸுக்கு ச்சூ மந்திரம் நடக்கும். அரசியலுக்கு வருவதற்கு முன்பாக ஒரு தொழில்முறை மந்திரவாதியின் (மேஜிஷியன்) மகனான அசோக் கெலாட், நாடு முழுவதும் சுற்றிக்கொண்டு மேஜிக் நிகழ்ச்சிகள் நடத்தினார்.
ஒருபுறம் இந்தியா உலக அளவில் முன்னணியில் வளர்ந்து வருகிறது. மற்றொருபுறம் கடந்த ஐந்து ஆண்டுகளில் ராஜஸ்தானில் என்ன நடந்தது என்பது உங்களுக்கே தெரியும். காங்கிரஸ் அரசு ராஜஸ்தான் மாநிலத்தை ஊழல், கலவரங்கள் மற்றும் குற்றங்களில் முதலிடம் பிடிக்க வைத்துள்ளது. அதனால்தான் ராஜஸ்தான் மக்கள் ‘மந்திரவாதி ஜி உங்களுக்கு எந்த ஒரு ஓட்டும் கிடைக்காது’ என்று சொல்கிறார்கள்.
எங்கெல்லாம் காங்கிரஸ் ஆட்சிக்கு வருகிறதோ, அங்கெல்லாம் தீவிரவாதிகள், குற்றவாளிகள் மற்றும் கலவரக்கார்கள் விடுவிக்கப்படுகிறார்கள். காங்கிரஸின் கொள்கையே திருப்திப்படுத்துவதுதான். அது உங்கள் உயிரை பணயம் வைப்பதாக இருந்தாலும் சரி. காங்கிரஸ் தலைமையிலான இந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில் ராஜஸ்தானில் பெண்கள், தலித்துகளுக்கு எதிராக அதிகமான குற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
ஹோலி பண்டிகையோ, ராம நவமியோ, ஹனுமன் ஜெயந்தியோ எதையும் நீங்கள் அமைதியாக கொண்டாட முடியவில்லை. அவற்றில் கலவரம், கல்வீச்சு, ஊரடங்கு போன்றவை ராஜஸ்தானில் தொடர்கதையாகிப் போனது. ராஜஸ்தான் பெண்களின் மன உறுதியை காங்கிரஸ் கட்சி சிதைத்துவிட்டது” என்று பிரதமர் மோடி பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், “பெண்கள் போலியாக பாலியல் வன்கொடுமை புகார் அளிப்பதாக முதல்வர் கூறியுள்ளார். அவரால், பெண்களைப் பாதுகாக்க முடியாதா? அப்படி பாதுகாக்க முடியாத முதல்வர் ஒரு நிமிடம் கூட பதவியில் இருக்கலாமா?" என்று கேள்வி எழுப்பினார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 200 தொகுதிகளுக்கு வரும் 25-ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3-ம் தேதி எண்ணப்பட உள்ளன. கடந்த 2018-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 73 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சுயேட்சைகளின் ஆதரவுடன் காங்கிரஸ் கட்சி கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சி செய்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT