Published : 18 Nov 2023 03:55 AM
Last Updated : 18 Nov 2023 03:55 AM

100 கோடி மக்களை சென்றடைந்த பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான ‘மனதின் குரல்’ (மன் கி பாத்) 100 கோடி மக்களை சென்றடைந்துள்ளதாக ரோத்தக் ஐஐஎம் (இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுடன் தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டு வருகிறார். மனதின் குரல் (மன் கி பாத்) என்ற நிகழ்ச்சி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்பாகிறது. கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபரில் இந்த நிகழ்ச்சி தொடங்கியது. இதன் 100-வது நிகழ்ச்சி கடந்த ஏப்ரல் மாதம் ஒலிபரப்பானது.

இந்நிலையில், மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்துடன் இணைந்து ரோத்தக் ஐஐஎம் நடத்திய ஆய்வில் மனதின் குரல் நிகழ்ச்சி 100 கோடி இந்தியர்களை சென்றடைந்துள்ளது தெரியவந்துள்ளது. ரோத்தக் ஐஐஎம் தனது 15-வது நிறுவன நாளை நேற்று கொண்டாடியது. அப்போது இந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டது.

இதுகுறித்து ஐஐஎம் கூறியதாவது: நாட்டின் சுமார் 96 சதவீத மக்கள் பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி பற்றி அறிந்துள்ளனர். இந்த நிகழ்ச்சி 100 கோடி மக்களை சென்றடைந்துள்ளது. இவர்கள் இந்த நிகழ்ச்சி பற்றி அறிந்திருப்பதுடன், ஒரு முறையாவது கேட்டுள்ளனர்.

23 கோடி பேர் நிகழ்ச்சியை தொடர்ந்து கேட்கிறார்கள், மேலும் 41 கோடி பேர் எப்போதாவது கேட்கிறார்கள். இவர்களும் வழக்கமான நேயர்களாக மாற்றப்படுவதற்கான வாய்ப்பை இந்த நிகழ்ச்சி கொண்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியை கேட்பவர்களில் பெரும்பாலானோர் அரசின்செயல்பாடுகள் பற்றி அறிந்துள்ளனர். 73 சதவீதம் பேர் நாடு முன்னேறும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். கருத்து கேட்கப்பட்டவர்களில் 58 சதவீதம் பேர் தங்கள்வாழ்க்கை நிலைமை மேம்பட்டுள்ளதாக கூறியுள்ளனர், 59 சதவீதம் பேர், அரசின் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளதாக கூறியுள்ளனர். இவ்வாறு ரோத்தக் ஐஐஎம் கூறியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x