Published : 18 Nov 2023 12:01 AM
Last Updated : 18 Nov 2023 12:01 AM
ஹைதராபாத்: பாஜகவில் இருந்து விலகிய நடிகை விஜயசாந்தி காங்கிரஸில் இணைந்துள்ளார். காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துக் கொண்டார்.
தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமாக திகழ்ந்த நடிகை விஜயசாந்தி, பாஜகவில் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். பிறகு தனிக்கட்சி தொடங்கிய அவர், அக்கட்சியை தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சியுடன் இணைத்தார். பிறகு அக்கட்சியை விட்டு வெளியேறி காங்கிரஸில் சேர்ந்தார். இந்நிலையில் கடந்த 2020-ல் மீண்டும் பாஜகவுக்கு திரும்பிய அவர் அக்கட்சியில் தேசிய செயற்குழு உறுப்பினராக செயல்பட்டுவந்தார்.
எனினும் கடந்த ஆண்டு முதலே பாஜகவில் தனக்கு முக்கியத்துவம் கிடைப்பதில்லை என்பதை பொதுவெளியில் பேசிவந்தார். பாஜக தேசிய செயற்குழு கூட்டம் மற்றும் கட்சி பொதுக்கூட்டம் எதிலும் நடிகை விஜயசாந்தி மேடை ஏறி பேசவில்லை. தொடர்ந்து கட்சி நடவடிக்கைகள் எதிலும் கலந்துகொள்ளாமல் இருந்துவந்த விஜயசாந்தி, சில தினங்கள் முன்தினம் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மாநில பாஜக தலைவர் கிஷன் ரெட்டிக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பிவைக்கவும் செய்தார்.
தொடர்ந்து தற்போது காங்கிரஸில் இணைந்துள்ளார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தார். தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ளன. இந்நிலையில் விஜயசாந்தி காங்கிரஸுக்கு சென்றிருப்பது பாஜகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், இவர் ஒரு மாதத்துக்குள் பாஜகவில் இருந்து விலகிய 4-வது முக்கிய தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT